மானநஷ்ட ஈடு வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க கோர்ட்டு நோட்டீஸ்
|பதில்மனு தாக்கல் செய்யும்படி பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை,
காங்கிரஸ் முன்னாள் எம்பி.ஜே.எம்.ஆரூணின் சகோதரர் மகன் உசேன் என்பவர் தன்னை அவதூறாகவும் உருவ கேலியும் செய்த நடிகர் பாபி சிம்ஹா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி ஆலந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "பாபி சிம்ஹாவும் நானும் சிறு வயது முதல் நண்பர்கள். என்னுடைய சகோதரர் மூலம் பாபி சிம்ஹாவுக்கு, ஜமீர் காசிம் என்பவர் அறிமுகம் ஆனார். ஜமீர் காசிம் கட்டுமான தொழில் செய்து வருகிறார். அவர் மூலம் கொடைக்கானலில் வீடு கட்ட பாபி சிம்ஹா முடிவு செய்தார். இருவரும் ஆலோசனை செய்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி கட்டுமான ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் 90 சதவீத கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் கட்டுமானத்துக்கு செலவான தொகையை பாபி சிம்ஹா வழங்கவில்லை. பலமுறை கேட்டும் இழுத்தடித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து என் தந்தை இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார். அப்போது 77 வயது முதியவர் என்று கூட பாராமல் பாபி சிம்ஹா என் தந்தையை மிரட்டி அவதூறாகவும் பேசினார். மேலும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது என்னைப் பற்றி அவதூறாகவும் உருவக் கேலியும் செய்தார்.
இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சலும் வேதனையும் ஏற்பட்டது. மேலும், வனத்துறை தொடர்பான பல்வேறு கிரிமினல் வழக்குகளை நான் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நான் விண்ணப்பம் செய்தபோது, அப்படி எந்த வழக்கும் எனக்கு எதிராக இல்லை என்று வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. எனவே, என்னை அவதூறாகவும் உருவ கேலியும் செய்த பாபி சிம்ஹா, மானநஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு ஆலந்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யும்படி பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை பிப்ரவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.