நடிகர் ராகவா லாரன்சின் 'ருத்ரன்' படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை
|நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகியுள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை,
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' உட்பட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார்.
'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் ஆயுதத்துடன் ராகவா லாரன்ஸ் ஆக்ரோஷமாக நிற்க, அவரால் தாக்கப்பட்ட பலர் கீழே விழுந்து கிடப்பது போல, லாரன்ஸ்க்கே உரித்தான ஸ்டைலில் வெளியாக அது முதல் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப சில தினங்கள் முன் இதன் டிரெய்லரும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
படம் வரும் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில். தற்போது ஏப்ரல் 24 ஆம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தின் இந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் பெற்றிருந்தது. டப்பிங் உரிமைக்காக ரூ.12.25 கோடிக்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. .
இதற்காக முன்பணமாக ரூ.10 கோடி செலுத்தியதாக சொல்லப்படுகிறது. ரூ.10 கோடி செலுத்திய நிலையில், மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததாக, ரெவன்சா நிறுவனத்தின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.