'வேலைப்பளு காரணமாக அடுத்த படத்தில் இணைய முடியவில்லை' - ஏ.ஆர்.ரஹ்மானின் பதிலை பகிர்ந்து பார்த்திபன் ட்வீட்
|அடுத்த படத்திற்கு தன்னால் இசையமைக்க இயலவில்லை என ஏ.ஆர்.ரஹ்மான் மின்னஞ்சல் மூலம் பார்த்திபனுக்கு பதிலளித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் பார்த்திபன் தனது ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'இரவின் நிழல்' திரைப்படம், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக பார்த்திபன் இயக்கி வரும் புதிய படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியுள்ளார். ஆனால் அதீத வேலைப்பளு காரணமாக இந்த முறை தன்னால் இசையமைக்க இயலவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் மின்னஞ்சல் மூலம் பார்த்திபனுக்கு பதிலளித்துள்ளார்.
அதில், 'தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் அதீத வேலைப்பளு காரணமாக இந்த முறை என்னால் உங்கள் படத்துக்கு இசையமைக்க இயலவில்லை. லட்சியம் கொண்ட இயக்குநர்களில் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களுடைய கதையை கேட்க நான் மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், "பழகுதல் காதலால், விலகுதலும் காதலால், ஆதலால்… ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை! வரும் படத்திலும் இருவரும் இணைவோமென நினைத்து இயலாதபோது நண்பர் ஏ.ஆர்.ஆர். அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில்" என்று பதிவிட்டுள்ளார்.