பிரபல நடிகருக்கு கொரோனா... ஆஸ்பத்திரியில் அனுமதி
|பிரபல தெலுங்கு நடிகர் போசானி கிருஷ்ணா முரளி. இவர் புனேயில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு ஐதராபாத் திரும்பினார். அப்போது அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலும் இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். போசானி கிருஷ்ணா முரளிக்கு ஏற்கனவே இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தற்போது மூன்றாவது முறையாக கொரோனா தொற்றில் சிக்கி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போசானி கிருஷ்ணா முரளி கடைசியாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான கப்ஜா படத்தில் நடித்து இருந்தார். இதில் ஸ்ரேயா, உபேந்திரா, சுதீப் ஆகியோரும் நடித்து இருந்தனர். தெலுங்கில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ஆந்திர மாநில திரைப்பட மேம்பாட்டு கழக தலைவராக அரசு இவரை நியமித்தது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.