'லியோ' பாடல் காப்பியா? - சர்ச்சையில் அனிருத்
|லியோ படத்தில் 'ஆர்டனிரி பர்சன்' பாடலை அனிருத் காப்பி அடித்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இசையமைப்பாளர் அனிருத் ஆரம்பத்தில் தனுஷின் 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் மூலம் பிரபலமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார்.
சமீபத்தில் அனிருத் இசையில் ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வந்தன. இந்த நிலையில் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆர்டனிரி பர்சன்' என்ற பாடலை ஐரோப்பாவின் பெலரஸ் நாட்டை சேர்ந்த இசைக்கலைஞர் ஒட்னிகாவின் "வேர் ஆர் யூ'' பாடல் ஆல்பத்தில் இருந்து அனிருத் காப்பி அடித்து இருப்பதாக ரசிகர்கள் சர்ச்சை கிளப்பி சமூகவலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
ஒட்னிகாவுக்கும் தகவல்கள் அனுப்பினர். இதுகுறித்து ஒட்னிகா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "லியோ படத்தின் பாடல் குறித்து எனது மெயில் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் கமெண்ட் செய்துவருவதை பார்த்தேன். அதற்கு நன்றி.
இந்த சர்ச்சை குறித்து எனக்கு தெளிவாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிப்பதற்கு நேரம் கொடுங்கள்'' என்று கூறியுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.