'கூலி' படத்தில் இணைந்த பின் நடிகர் நாகார்ஜுனா போட்ட பதிவு
|'கூலி' படத்தில் இணைந்தது குறித்து நடிகர் நாகார்ஜுனா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக 'கூலி' உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த சூழலில், இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை ஒவ்வொருவராக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் சவுபின் சாஹிர் கூலி படத்தில் இணைந்தார். இதில் அவர் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, நேற்று இப்படத்தில் சைமன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்தது. நாகார்ஜுனாவின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், 'கூலி' படத்தில் இணைந்தது குறித்து நடிகர் நாகார்ஜுனா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'நன்றி லோகி. 'கைதி' படத்தில் இருந்தே உங்களுடன் பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தேன். புதிய படத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆர்வமாக உள்ளது. தலைவருடன் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.