சிவாஜியை அவமதிப்பதாக சர்ச்சை: 'நடிகர் திலகம்' பெயரில் படம் எடுக்க எதிர்ப்பு...!
|டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'நடிகர் திலகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை,
மலையாளத்தில் 'நடிகர் திலகம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இந்தப்படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதில் தனுசுடன் 'மாரி 2' தமிழ் படத்தில் நடித்து பிரபலமான டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கிறார். பிரபல வில்லன் நடிகர் லால் மகன் ஜீன் பால் லால் டைரக்டு செய்கிறார்.
இந்தப்படம் அரசியலுக்கு வர விரும்பும் நடிகரை மையமாக வைத்து நகைச்சுவை கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. படத்துக்கு நடிகர் திலகம் பெயர் வைப்பது சிவாஜி கணேசனை அவமதிப்பதாக உள்ளது என்றும் பெயரை மாற்றவேண்டும் என்றும் வற்புறுத்தி சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சந்திரசேகரன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், ''நடிகர் திலகம் என்பது தமிழ் சினிமாவின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த சிவாஜி கணேசனுக்கு ரசிகர்கள் அளித்த அடைமொழி. எனவே நடிகர் திலகம் பெயரை மலையாள நகைச்சுவை படத்துக்கு டைட்டிலாக வைத்து இருப்பது சிவாஜியை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இது சிவாஜி புகழை களங்கப்படுத்தும் செயல். எனவே நடிகர் திலகம் பெயரை படத்துக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. பெயரை மாற்றவேண்டும்'' என்று கூறப்பட்டு உள்ளது.