9 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி
|ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
சென்னை,
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திரமோடி ரூ.6,315.23 கோடி செலவில் ராஜ்கோட் (குஜராத்), பதிண்டா (பஞ்சாப்), ரேபரலி (உத்தரபிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்காளம்), மங்களகிரி (ஆந்திரா) ஆகிய நகரங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைத்தார். ஆனால் அதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கதி என்ன ஆயிற்று? என்ற மனக்குறை தமிழக மக்களுக்கு இருந்தது.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். பிரதமர் இந்த கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு அதாவது 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, இமாசல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் மத்திய அரசு நிதி உதவியுடன் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டதால், அங்கு இந்த மருத்துவமனைகள் கட்டப்பட்டு விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் ஜப்பான் நாட்டு ஜிக்கா நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் கட்ட முடிவெடுக்கப்பட்டதால் அந்த நடைமுறையில் தாமதம் ஏற்பட்டது.
அதன்பிறகு தமிழ்நாட்டில் எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவது? என்பதிலும் ஒரு திடமான முடிவை எடுக்க காலதாமதம் ஏற்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை அருகேயுள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடிவு செய்து அதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு 2018-ம் ஆண்டு ஜூன் 18-ந்தேதி தமிழக அரசுக்கு அனுப்பியது. ரூ.1,264 கோடி செலவில் இந்த மருத்துவமனையை கட்டுவதற்காக 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டினார். பிரதமரே அடிக்கல் நாட்டி விட்டார். உடனடியாக கட்டுமான பணி தொடங்கிவிடும் என்று தமிழகமே எதிர்பார்த்தது. ஆனால் அடிக்கல் நாட்டியதோடு சரி, ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனையோடு இணைந்த மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வருகிறது. அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்கு பிறகு, இப்போது இந்த மருத்துவமனை கட்டிட பணி எல்.அண்டு.டி. நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு, அவர்களும் பூமி பூஜை நடத்தி விட்டார்கள். இப்போது இந்த மருத்துவமனை ரூ.1,978 கோடி செலவில் கட்டப்படும் என்றும், இதில் ரூ.1,621 கோடி ஜிக்கா கடன் மூலமும், மீதி தொகை மத்திய அரசின் நிதி மூலமும் செலவழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 33 மாதங்களில் இந்த கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு 900 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடன், புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி உள்பட உயர்தர சிகிச்சைக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு பெரிய மருத்துவ வளாகத்தில் மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவனை இயங்கப்போகிறது.
9 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டாலும், இனியாவது திட்டமிடப்பட்டுள்ள 33 மாதங்களில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.