சென்னை
'எனது படத்தை தடுக்க சதி' நடிகை அமலா பால் புகார்
|நடிகை அமலா பால் ‘கடாவர்’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். இந்த படத்தை வெளிவராமல் தடுக்க சிலர் சதி செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அமலா பால் 'கடாவர்' படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் மலையாளத்தில் தயாரான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை வெளிவராமல் தடுக்க சிலர் சதி செய்ததாக அமலா பால் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு திரைப்பட விழாக்களில் பங்கேற்கிறேன். ரசிகர்களையும், பார்வையாளர்களையும் நேரில் காணும்போது உற்சாகம் பிறக்கிறது. 'கடாவர்' படத்தில் எனது கதாபாத்திரம் புதுமையாகவும், வலிமையாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தை நானே தயாரித்தேன். 4 ஆண்டு காலம் கடினமாக உழைத்தோம். பல போராட்டங்களுக்கு இடையே இந்த படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். ஆனால் படத்தை வெளியிட திட்டமிட்டபோது பல வடிவங்களில் தடைகள் உருவானது. இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக முயற்சி செய்தனர். வாழ்க்கையில் பலர் எதிராக உள்ளனர். யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்று தெரியவில்லை. ஆனாலும் சிலர் உதவினர். கடவுளின் ஆசியால் தடைகளை தாண்டி வருகிறது' என்றார்.