'அந்தகன்' பாடல் குறித்த சந்தோஷ் நாராயணன் பதிவால் சர்ச்சை
|பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் ‘'அந்தகன்ஆந்தெம் 'பாடலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சில சிக்கல்களால் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த 'அந்தகன்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம், பிரசாந்துக்கு நல்ல கம் பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 'அந்தகன்' படத்தின் 'அந்தகன் ஆந்தெம்' என்ற தீம் பாடலை நடிகர் விஜய் நேற்று வெளியிட்டார்.
இந்த பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் 'இந்த பாடலை கம்போஸ் செய்தது நான் தான், ஆனால் நான் கம்போஸ் செய்த மாதிரி இந்த பாடல் இல்லை' என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், சோனி மியூசிக் வெளியிட்டுள்ள 'அந்தகன் ஆந்தெம்' பாடலின் லிங்கை மேற்கொள் காட்டி, "வரலாற்றில் முதன்முறையாக, ஆடியோ லேபிளும் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இது என்னுடைய பாடலா என்பதை ஆய்வு செய்வதற்கு நான் பணம் வாங்குவதில்லை" என கிண்டலாக பதிவிட்டு, அதற்கு வடிவேல் ரியாக்ஷனையும் சேர்த்துள்ளார். அதற்கு அடுத்த பதிவில், "இசை, பாடல் வரிகள், மிக்ஸிங், இசைக்கோர்வைகள் எதுவும் நான் அமைத்தது மாதிரி இல்லை" என தெரிவித்துள்ளார்.