< Back
சினிமா செய்திகள்
திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு... நடிகை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி...!
சினிமா செய்திகள்

திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு... நடிகை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி...!

தினத்தந்தி
|
16 Nov 2023 7:51 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பைலட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர் 2013ம் ஆண்டு மலையாளத்தில் 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம், ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

கடந்த 2018ம் ஆண்டு வெளியான நடிகையர் திலகம் படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் இவர் நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக முன்னேறினார். தமிழில் ரஜினி, விஜய், சூர்யா,விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தார். இதற்கிடையே பென்குயின், மிஸ் இந்தியா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடித்தார்.

உதயநிதி ஸ்டாலினுடன் இவர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தற்போது இவர் ஜெயம்ரவியின் சைரன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் ரகு தாத்தா, ரிவோல்வர் ரீட்டா, கண்ணி வெடி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் திரைத்துறையில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் சினிமா உலகில் நுழைந்து பத்து ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறேன். 10 ஆண்டுகள் நிறைவு செய்தாலும் இப்போதுதான் தொடங்கி இருப்பது போல இருக்கிறது. இதை நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

என்னுடைய அப்பா, அம்மாவிற்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். என்னுடைய குரு பிரியதர்ஷனுக்கு நான் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய திரை உலக பயணம் தொடங்குவதற்கு அவர்தான் காரணம். இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது.

என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி. அது மட்டும் இல்லாமல் என்னை விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. அவர்களுடைய விமர்சனங்களும் என்னுடைய வளர்ச்சிக்கு உதவுகிறது' என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்