தேர்தல் கமிஷனில் புகார்.. கன்னட நடிகர் சுதீப் படங்களுக்கு தடை?
|பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து இருந்தார். கன்னட சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக சுதீப் அறிவித்து உள்ளார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனக்கு கஷ்டமான காலத்தில் உதவியதாகவும், எனவே அவர் எந்த தொகுதிகளில் எல்லாம் தேர்தல் பிரசாரம் செய்யும்படி சொல்கிறாரோ அந்த தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வேன் என்றும் கூறினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் முடியும் வரை சுதீப் திரைப்படங்களை திரையிட தடை செய்யக்கோரி சிவமொக்காவை சேர்ந்த வக்கீல் ஒருவர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். சுதீப்பின் திரைப்படங்கள் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தேர்தல் நடைமுறை விதிகளை கருத்தில் கொண்டு மே 13-ந் தேதிவரை அவரது படங்களை திரையிட அனுமதிக்கக்கூடாது, சுதீப் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும்'' என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.