பெண்கள் குறித்து அவதூறு: கன்னட நடிகர் தர்ஷன் மீது மேலும் 2 புகார்கள்
|பெண்களை பற்றியும் கர்நாடகாவில் உள்ள முக்கிய சமூகத்தின் தலைவர்கள் பற்றியும் நடிகர் தர்ஷன் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கி வருகிறார்.
இந்த சூழலில் ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் தர்ஷன் பெண்களை பற்றி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவர்கள் குறித்து அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் பேசியதாகவும் தகவல் வெளியானது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனையடுத்து நடிகர் தர்ஷனின் பேச்சை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மேலும் நடிகர் தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் தர்ஷன் மீது 2 பேர் தனித்தனியே போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் பெண்களை பற்றியும் கர்நாடகத்தில் உள்ள முக்கிய சமூகத்தின் தலைவர்கள் பற்றியும் நடிகர் தர்ஷன் அவதூறாக பேசி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த புகாரை பெற்ற போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.