மாற்றுத்திறனாளி ஆணையம் பிருதிவிராஜ் படத்துக்கு நோட்டீஸ்
|மாற்றுத்திறனாளி ஆணையம் பிருதிவிராஜ் நடித்த கடுவா படத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிருதிவிராஜ், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ள கடுவா மலையாள படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தை தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான ஷாஜி கைலாஸ் டைரக்டு செய்துள்ளார். கேரளாவில் உயர் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவாகுன்னல் குருவச்சன் என்பவரது வாழ்க்கை உண்மை கதையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
இந்த படம் ஏற்கனவே திருட்டு கதை வழக்கில் சிக்கியது. இந்த நிலையில் கடுவா படத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் சர்ச்சை வசனங்கள் இருப்பதாக மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கேரள மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் டைரக்டர் ஷாஜி கைலாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதையடுத்து பிருதிவிராஜ், ''தவறுதலாக இது நடந்து விட்டது. இதற்காக வருந்துகிறேன்" என்று வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். டைரக்டர் ஷாஜி கைலாசும் சர்ச்சை வசனம் காரணமாக யாருடைய மனதும் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.