'மீண்டும் நடிக்க வந்தது, தாய் வீட்டுக்கு மகள் வருவதை போல் உணர்கிறேன்' - ஹன்சிகா பேட்டி
|‘மீண்டும் நடிக்க வந்தது, தாய் வீட்டுக்கு மகள் வருவதை போல் உணர்கிறேன்’ என நடிகை ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும், தொழில் அதிபரான சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது திருமணத்துக்கு முன்பு ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க ஹன்சிகா முடிவு செய்து உள்ளார்.
இதற்காக சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நடிகை ஹன்சிகாவை ரசிகர், ரசிகைகள் மாலை அணிவித்தும், ரோஜாப் பூ கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போது நிருபர்களிடம் நடிகை ஹன்சிகா கூறும்போது, "நான் மீண்டும் நடிக்க வந்தது, தாய் வீட்டுக்கு மகள் வரும்போது எப்படி இருக்குமோ? அதுபோல் உணர்கிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். இந்த ஆண்டு எனது நடிப்பில் 7 படங்கள் வரப்போகிறது. இந்த ஆண்டு எனக்கு அதிர்ஷ்டமாக உள்ளது. சென்னையில் ஒரு மாதம் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளேன். கல்யாண வாழ்க்கை மிகவும் நல்லா இருக்கிறது. திருமண வாழ்க்கையை அனுபவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.