உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு நகைச்சுவை நடிகர் மருத்துவமனையில் அனுமதி...!
|நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்மில் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அவரது பயிற்சியாளர் உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு இரண்டு முறை சிபிஆர் (CPR) கொடுக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார்.
அதன்பின்பு அவர் ஆஞ்சியோகிராபி சிகிச்சைக்காக ஆய்வகத்திற்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ராஜூ ஶ்ரீவஸ்தவா மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளார். அவர் நலமாக இருப்பதாகவும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் மற்றொரு நகைச்சுவை நடிகர் சுனில் பால் தெரிவித்துள்ளார்.
ராஜூ ஶ்ரீவஸ்தவா பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான "தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்" முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் நகைச்சுவை நடிகராக அங்கீகாரம் பெற்றார்.
'மைனே பியார் கியா', 'பாசிகர்', 'பாம்பே டூ கோவா', 'ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா' உள்ளிட்ட இந்தி படங்களில் ராஜு ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார். ஸ்ரீவஸ்தவா, உத்தரபிரதேச திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் தற்போதைய தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.