ரூ.400 கோடி குவித்தது... திரையுலகை அதிரவைத்த காந்தாரா படத்தின் வசூல்
|ரூ.16 கோடி செலவில் எடுத்த காந்தாரா படம் 50 நாட்களை கடந்துள்ள நிலையில் உலக அளவில் தற்போது ரூ.400 கோடி வசூலித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களை வைத்து ரூ.100 கோடி, ரூ.150 கோடி செலவில் எடுக்கப்பட்ட பல படங்கள் ரூ.50 கோடி கூட வசூலிக்காமல் தோல்வியை சந்தித்துள்ளன.
இந்த நிலையில் வெற்றி பெற்றுள்ள 'காந்தாரா" படத்தின் வசூல் முந்தைய வெற்றி படங்களின் வசூல் சாதனைகளையெல்லாம் புரட்டிப்போட்டு திரையுலகினரை அதிர வைத்து உள்ளது. கன்னடத்தில் தயாரான காந்தாரா படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் தெய்வமாக வணங்கும் பஞ்சுருளி என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து இந்த படம் வந்தது. ரிஷப் செட்டி நடித்து இயக்கி இருந்தார்.
படம் வெளியானதில் இருந்தே பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் பலர் படத்தை பார்த்து பாராட்டினர். வெறும் ரூ.16 கோடி செலவில் எடுத்த இந்த படம் 50 நாட்களை கடந்துள்ள நிலையில் உலக அளவில் தற்போது ரூ.400 கோடி வசூலித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
காந்தாரா படம் இந்த வாரம் ஓ.டி.டி. தளத்திலும் வெளியாக உள்ளது.