'காபி வித் காதல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
|‘காபி வித் காதல்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இந்நிலையில், காபி வித் காதல் திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காபி வித் காதல் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.