'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்க்க இருக்கும் கிளிண்ட் ஈஸ்ட்வுட்... மகிழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ்!
|இந்த படத்தைக் காணுமாறு கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
சென்னை,
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம், கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ராகவா லாரன்ஸின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் பிரபல ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ரசிகராக நடித்திருப்பார். கிளிண்ட் ஈஸ்ட்வுட், ஒரு படப்பிடிப்புக்காக தமிழ்நாட்டிற்கு வந்தது போலவும், இளம் வயது ராகவா லாரன்சிடம் கேமரா ஒன்றை பரிசளிப்பது போலவும் காட்சிபடுத்தப்பட்டிருக்கும். மேலும் படம் முழுவதும் உடைகள், சண்டைக்காட்சிகள் உள்ளிட்டவற்றில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் திரைப்படங்களின் சாயல் இருந்துகொண்டே இருக்கும்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம், தற்போது ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தைக் காணுமாறு கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.
இதற்கு அந்த வலைதள பக்கத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில், "கிளிண்ட் ஈஸ்ட்வுட் அப்படத்தைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார். இப்போது அவர் பணியாற்றி வரும் திரைப்படத்தின் பணிகள் முடிந்ததும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை பார்ப்பார். நன்றி" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' தளத்தில், "நம்ப முடியவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு ஈஸ்ட்வுட் கூறும் கருத்துக்களுக்காக ஆவலாக காத்திருக்கிறேன். ஆசிர்வதிக்கப்பட்டவான உணர்கிறேன். இதை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.