சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
|உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி: 'ராவண கோட்டம்' படம் சாந்தனுவுக்கு மறுவாழ்வு தந்ததா? (த. சத்திய நாராயணன், பட்டாபிராம், சென்னை-72)
பதில்: கிடைக்கும் பாராட்டுகள் அதை மெய்ப்பிப்பது போல இருக்கிறதே..!
கேள்வி: இரட்டை அர்த்த வசனங்களில் கலக்கிய நடிகர்கள் யார்? (பி.கனகராஜ், அரசரடி, மதுரை)
பதில்: 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன்!
கேள்வி: நடிகர் ஜீவனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? (ஐ. ராகிணி, திருத்துறைப்பூண்டி)
பதில்: இன்னும் அந்த காளைக்கு மூக்கணாங் கயிறு கட்டவில்லை!
கேள்வி: விஜய்யின் 68-வது படத்தை இயக்குபவர் யார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: வெங்கட் பிரபு!
கேள்வி: விஜய் ஆண்டனி எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்?, எத்தனை படங்களுக்கு இசையமைத்துள்ளார்? (மாலா துரைசாமி, கோவை)
பதில்: 18 படங்களில் நடித்துள்ளார். 38 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவர் முதன்முறையாக இயக்கிய படம், 'பிச்சைக்காரன்-2'!
கேள்வி: பிரியங்கா சோப்ரா ரூ.200 கோடி மதிப்பிலான வைர நகை அணிந்திருக்கிறாராமே... இதற்கு முறையாக வரி கட்டியுள்ளாரா? (மு.ரா.பாலாஜி, சொர்ணகுப்பம், கோலார் தங்கவயல், கர்நாடகா)
பதில்: அதை அணிவித்தவரே, கட்டி விட்டாராம்!
கேள்வி: ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் நிறுவனம் மீண்டும் படங்கள் தயாரிப்பது எப்போது? (சாய் விஹான், வடபெரும்பாக்கம், திருவள்ளூர்)
பதில்: 'விரைவில் எங்களின் பிரத்யேக ஒலி திரையில் ஒலிக்கும்' என்று ஏ.வி.எம். நிறுவனத்தின் 3-ம் தலைமுறை உரிமையாளர் அருணா குகன் கூறியிருக்கிறாரே..!
கேள்வி: நகைச்சுவை நடிகர் செந்தில் சினிமாவுக்கு வந்தது எப்படி? (உத்தமன், கரூர்)
பதில்: எண்ணெய் செக்கு ஆட்டும் கடையிலும், தனியார் மதுபான கூடத்திலும் வேலைபார்த்த செந்தில் அங்கு வந்த இயக்குனர்கள், துணை நடிகர்களை பழக்கம் பிடித்து சினிமாவுக்கு வந்தார். கவுண்டமணி கூட்டணியால் காமெடியில் கொடிகட்டி பறந்தார்!
கேள்வி: கதாநாயகி என்பதை தாண்டி எல்லா கதாபாத்திரங்களிலும் அசத்தும் நடிகை யார்? (எஸ். சண்முக சுந்தரம், வடக்கு விஜயநாராயணம், நாங்குநேரி)
பதில்: சந்தேகமே வேண்டாம், ஐஸ்வர்யா ராஜேஷ்!
கேள்வி: 'இந்தியன்-2' எப்போது திரைக்கு வரும்? (ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி)
பதில்: இந்த ஆண்டு இறுதியில்!
கேள்வி: நடிப்பதற்கு முன்பு நாகேஷ் என்ன செய்துகொண்டிருந்தார்? (குருமூர்த்தி, வாடிப்பட்டி)
பதில்: ஊறுகாய் கம்பெனி, மில் வேலை, ரெயில்வே பணி, மேடை நாடகம் என்று தட்டுத் தடுமாறிய பின்னர் தான் திரையுலகில் நாகேஷ் கால்பதித்தார்!
கேள்வி: விஷால் திருமணம் எப்போது தான் நடக்கும்? (கல்யாணி ராஜசேகர், விருதுநகர்)
பதில்: முன்பெல்லாம் கட்டிடம்... கட்டிடம்... என்று கட்டம் கட்டினார். இப்போது அப்படியல்ல, ஆர்.சி.பி. கப் அடிக்கட்டும் பார்க்கலாம்!
கேள்வி: கால்சென்டரில் பணியாற்றும் அதிகாரியாக எந்த கதாநாயகி நடித்தால் சிறப்பாக இருக்கும்? (மாணிக்கம், திருப்பூர்)
பதில்: சமந்தா வெளுத்து வாங்குவார்!
கேள்வி: அதர்வாவும், ராசி கன்னாவும் நெருங்கிய நண்பர்களாமே? (ஜெய்சன், நாசரேத்)
பதில்: ஒருவரது வீட்டுக்கு இன்னொருவர் சென்று அடிக்கடி சாப்பிடும் அளவுக்கு நட்பாம்!
கேள்வி:'ஜென்டில்மேன்' பட புகழ் 'டிக்கிலோனா' விளையாட்டு எந்த நடிகைக்கு பிடிக்கும்? (சஞ்சய்காந்தி, ஓட்டேரி, சென்னை-7)
பதில்: அந்த விளையாட்டு பலருக்கும் பிடிக்கத்தான் செய்கிறது. ஆனால் பின்விளைவுகளை எண்ணி யாரும் விளையாட வருவது இல்லை!
கேள்வி: யாஷிகா ஆனந்த் பானி பூரி விற்பவராக நடிப்பாரா? (ஆசைத்தம்பி, காரைக்கால்)
பதில்: கொடுக்க வேண்டியதை கூடுதலாக கொடுத்தால் பானிபூரி என்ன, பணியாரம் விற்பவராகவும் நடிப்பாராம்!
கேள்வி: சன்னி லியோனும், ஊர்வதி ரவுத்தேலாவும் சகோதரிகளா? (சுதாகர், திருவண்ணாமலை)
பதில்:- நடிகைகள் என்பதை தவிர இருவருக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. கலைச்சேவையில் இருவரும் வெவ்வேறு பிரிவுகள்!
கேள்வி: 'ரஜினிகாந்துக்கு வில்லியாக நடிக்க கூட நான் தயார் தான்', என்று வரலட்சுமி சரத்குமார் கூறியிருக்கிறாரே? (ஜெ.மணிகண்டன், ஏ.கஸ்பா, ஆம்பூர்)
பதில்: துணிச்சலான முடிவுகள் எடுப்பதில் தந்தையை அடிக்கடி நினைவுகூருகிறார்!
கேள்வி: நடிகைகள் ஏன் தொழில் அதிபர்களையே திருமணம் செய்துகொள்கிறார்கள்? (மணிகண்டன், ராமநாதபுரம்)
பதில்: வசதி, வாய்ப்புகளை கொடுப்பதுடன் 'மனம் கோணாமலும்' அவர்கள் நடந்து கொள்வார்களாம்!
கேள்வி: லோகேஷ் கனகராஜ் - 'ஜெய்பீம்' மணிகண்டன். இருவரில் தீவிர கமல்ஹாசன் ரசிகர் யார்? (எம்.எடிசன், பிலோமிநகர், திருச்செந்தூர்)
பதில்: லோகி தான். சட்டையை கிழித்துக்கொண்டு சண்டைக்கு போகும் அளவுக்கு வெறித்தனமான கமல் ரசிகராம்!
கேள்வி: நடிகை ஷெரினை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், ஆசை நிறைவேறுமா? (ராசய்யா, விருதுநகர்)
பதில்: காளை மாடு ராசிக்காரரான அவருக்கு, ஏறு தழுவும் வீரரைத் தான் ரொம்ப பிடிக்குமாம்!
கேள்வி:- பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறாரே? (சுமதி வெங்கட், புதுச்சேரி)
பதில்:- எல்லாம் ஒரு விளம்பரம் தான்...!
கேள்வி:- வடிவேல் நடித்த படங்களிலேயே மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் எவை? (வெங்கடேசன், நாமக்கல்)
பதில்:- சூனாபானா, கைப்புள்ள, நாய்சேகர், பாடிசோடா, என்கவுண்ட்டர் ஏகாம்பரம், வண்டு முருகன் போன்ற கதாபாத்திரங்கள் மறக்கமுடியாதவை!
கேள்வி:- ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் மகள்கள் ஷிவானியும், ஷிவாத்மிகாவும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? (அர்ஜூன், மில்லர்புரம், தூத்துக்குடி)
பதில்:- வாரிசு நடிகைகள் இருவரும் தெலுங்கு சினிமாவில் 'காரசார' கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
கேள்வி:- 'உழைப்பாளி' படத்தில் 'ஆடினா...', 'பாடினா...', 'ஓடினா..' என்ற ரீதியில் 4-வதாக கவுண்டமணியிடம், ரஜினிகாந்த் குறிப்பிடும் நடிகை யாராக இருக்கும்? (கோ.பாலு, புரசைவாக்கம், சென்னை)
பதில்:- குப்புற படுத்துக்கொண்டு யோசித்துப் பாருங்களேன்!