சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
|உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி:- எம்.ஜி.ஆர். - நம்பியார் இடையே நட்பு எப்படி இருந்தது? (லோகதேவி, தேவிபுரம்)
பதில்:- 'ராமச்சந்திரா...' என்று நம்பியார் அழைக்கும் அளவுக்கு நட்பின் நெருக்கம் இருந்தது. அந்த உரிமையை நம்பியாருக்கு, எம்.ஜி.ஆர். வழங்கியிருந்தார்!
கேள்வி:- குருவியாரே... இளம் நடிகைகளின் பலவீனம் என்ன? (ஆர்.ரெங்கசாமி, வடுகப்பட்டி, தேனி)
பதில்:- புகழ்ச்சிக்கு உடனடியாக மயங்கி விடுவது!
கேள்வி:- 'ஓ போடு...' நடிகை கிரண் என்ன செய்துகொண்டு இருக்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்:- `ஆ' என வாயை பிளக்கும் வகையிலான கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு காசு பார்த்து வருகிறார்!
கேள்வி:- 'சாகுந்தலம்' படத்தில் சகுந்தலையாக நடித்த சமந்தா மீண்டும் சரித்திர படங்களில் நடிப்பாரா? (பி.உஷா, திருச்சி)
பதில்:- அந்த ஆசையை குழி தோண்டி புதைக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்ததாம். அதனால் வாய்ப்பு ரொம்ப குறைவு!
கேள்வி:- இசையமைப்பாளர் - நடிகர். எதில் ஜி.வி.பிரகாஷ்குமார் கைதேர்ந்தவர்? (எம்.ரேவதி, அருப்புக்கோட்டை)
பதில்:- இரண்டிலுமே அவர் பிரகாசிப்பதால்தான் இசையமைப்புக்கும், நடிப்புக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது!
கேள்வி:- சமீபகாலமாக கமல்ஹாசன் தனது உடலில் 'பிக் பாஸ்' ஸ்டைலில் ஒரு சிறிய பையை மாட்டிக்கொண்டே நடமாடுகிறாரே, பையில் என்ன ரகசியம் இருக்கிறது? (ஆரி, நெல்லை)
பதில்:- ரொம்ப யோசிக்க வேண்டாம். அது செல்போன் வைக்கும் 'பவுச்' தான். ஒரு வெளிநாட்டு பயணத்தில் அந்த பையை வாங்கி பயன்படுத்துகிறார்!
கேள்வி:- 'கரகாட்டக்காரன்' படத்தில் வந்த சொப்பன சுந்தரியின் காரை இப்போது யார் வைத்திருக்கிறார்? (வடிவேல் முருகன், திருத்தணி)
பதில்:- எம்.ஜி.ஆர்., சிவாஜி காலம் முதல் திரைப்படங்களில் வலம் வரும் இந்த காரை, சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஒருவர் வைத்திருக்கிறார். ஆனால் சொப்பன சுந்தரி பற்றி, அவருக்கு எதுவுமே தெரியாதாம்!
கேள்வி:- அஜித் - விஜய் ரசிகர்கள் மோதல்போல, இருபெரும் நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகளின் மனநிலை எப்படி இருக்கும்? (பி.சரவணன், தூத்துக்குடி)
பதில்:- 'தென்னை மரத்துல ஒரு குத்து... பனை மரத்துல ஒரு குத்து...' என்கிற வடிவேலு பட காமெடி போன்ற மனநிலையில் இருக்கும்!
கேள்வி:- சினிமா தியேட்டர்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கப்பட்டு இருக்கிறாரே? (வே.அழகர், ஒக்கூர் புதூர்)
பதில்:- கலைத்துறைக்கு ஏற்படும் பின்னடைவை ஒரு நல்ல கலைஞனால் ஏற்கவே முடியாது. நியாயமான ஆதங்கம் தானே..!
கேள்வி:- நடிகைகளை கோவில் சிலை போல... என்று ஏன் புகழ்கிறார்கள்? (கலையரசன், ஆத்தூர்)
பதில்:- அந்தளவுக்கு ஒப்பனை கலைஞர்களால் செதுக்கப்படுகிறார்களே..!
கேள்வி:- நடிகை சங்கவி கடைசியாக நடித்த படம்? (அருண், திருவண்ணாமலை)
பதில்:- 2019-ம் ஆண்டில் வெளியான 'கொளஞ்சி' என்ற படத்துக்கு பிறகு அவர் நடிக்கவில்லை!
கேள்வி:- 'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்...' என்ற பாடல் இடம்பெற்ற படம் எது? பாடியவர் யார்? (த.நேரு, வெண்கரும்பூர்)
பதில்:- 'வல்லவனுக்கு வல்லவன்' (1965). வேதா இசையில், கண்ணதாசனின் காவிய வரிகளில் உருவான அந்த பாடலை பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன்!
கேள்வி:- ஓர் நடிகையின் நடிப்பை இன்னொரு நடிகை புகழ்வது எப்போது? (கார்த்திக், மேட்டூர்)
பதில்:- அந்த படம் தோல்வி அடையும்போது..!
கேள்வி:- தணிக்கை வாரியத்தால் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் எது? (கற்குவேல், மேலூர்)
பதில்:- எம்.ஜி.ஆர். நடிப்பில் 1951-ம் ஆண்டில் வெளியான 'மர்மயோகி'. இதில் ஒருவர் பேயாக தோன்றுவதை காரணம் காட்டி சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதாம்!
கேள்வி:- குருவியாரே... மறைந்த நடிகர் முரளி பற்றி தெரியாத தகவல் இருந்தால் சொல்லுங்களேன்... (ஐஸ்வர்யா, அலங்காநல்லூர், மதுரை)
பதில்:- முரளியின் தந்தை சித்தலிங்கையா, கன்னட திரையுலகில் பிரபல தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் விளங்கினார். ஆனாலும், முரளி தான் திரையுலகில் பிரபலமாவதற்கு, எந்த வகையிலும் தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை!
கேள்வி:- அருண்பாண்டியனும், ராம்கியும் உறவினர்களா? (சிவ.பரமசிவம், சிவகங்கை)
பதில்:- இருவரும் திரைப்படக்கல்லூரியில் ஒரே காலத்தில் படித்தவர்கள். நல்ல நண்பர்கள்!
கேள்வி:- தான் நடித்த பட விழாவுக்கு வருவதற்கு கூட நடிகர் விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டாராமே, உண்மையா? (ரேகா வாசுதேவன், மயிலாப்பூர், சென்னை)
பதில்:- தனக்கு வேண்டாதவர்கள் பரப்பி விடும் வதந்தி என்று விமல் காட்டமாக மறுத்துள்ளாரே..!
கேள்வி:- 'துப்பறிவாளன்-2' படம் எப்போது வெளியாகும்? (சத்தியநாராயணன், அயனாவரம்)
பதில்:- முடங்கி கிடக்கும் அந்த படத்துக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது!
கேள்வி:- நடிகைகள் குழந்தை பெற்ற பின்பும் அழகாய் இருப்பது எப்படி? (ரத்தினசாமி, சேலம்)
பதில்:- 'பேக்கப்' ஆன பின்பும் 'மேக்கப்' கொடுக்கும் ஊக்கம் தான்!
கேள்வி:- ரகுல் பிரீத் சிங்கின் மெலிந்த தேகத்துக்கு என்ன காரணம்? (சேது கோதண்டராம், நாமக்கல்)
பதில்:- திட உணவுகளை காட்டிலும் திரவ உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறாராம்! அழகான இடைக்காக, எடையை வெறுக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்!