< Back
சினிமா செய்திகள்
சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்

தினத்தந்தி
|
8 May 2023 2:45 PM IST

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி: அமலாபால் இப்போது என்ன செய்கிறார்? (ஆர்.மாடசாமி, வாடிப்பட்டி)

பதில்: விவாகரத்து நடிகரை சுற்றி வருகிறார். 'மீண்டும் ஒரு வெற்றிப்படம் தருவோமா...' என்று அழுத்தம் கொடுக்கிறார்!

கேள்வி: வடிவேலு இல்லாத தமிழ் சினிமா எப்படி இருக்கிறது? (எம்.ஆர்.வடிவேலன், நெல்லை)

பதில்: சினிமா உலகில் எந்த நடிகர்-நடிகையரும் வழிப்போக்கர்களே. இவர் மட்டும் விதிவிலக்கா என்ன..!

கேள்வி: சமந்தா என்ன படித்துள்ளார்? (வாசு, ஊட்டி)

பதில்: பி.காம். வணிகவியல். அதனால் கணக்கு வழக்கெல்லாம் கறாராக இருக்கும்!

கேள்வி: சுருதிஹாசன் வில்லி வேடங்களில் நடிப்பாரா? (கார்த்திக், விருத்தாசலம்)

பதில்: இப்போது வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

கேள்வி: குருவியாரே, பாக்யராஜ் நடித்த படங்களிலேயே முதன்முதலில் அதிக விலைக்கு வியாபாரமான படம் எது? (முகமது பாரூக், ராமநாதபுரம்)

பதில்: 1984-ம் ஆண்டு வெளியான 'தாவணி கனவுகள்'!

கேள்வி: இலியானா திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆகியிருக்கிறாரே... இது எதை காட்டுகிறது? (குட்டி ரவி, ஊட்டி)

பதில்: துணிச்சல் என்றா சொல்லமுடியும்... 'லைசென்ஸ்' இல்லாமல் வண்டி ஓட்டியிருக்கிறார், அவ்வளவுதான்!

கேள்வி: பாரதிராஜா மீண்டும் படங்கள் இயக்காதது ஏன்? (எம்.வீ. மதுரைச்சாமி, கள்ளந்திரி, மதுரை)

பதில்: அவர் அன்று விதைத்த பல விதைகள் இன்று மரமாகி இருக்கின்றன. அந்த மரங்களே இனி அவரது பணியை தொடரும்!

கேள்வி: டி.ராஜேந்தர் என்றதும் நினைவுக்கு வருவது எது? (டி.என்.ராமு, தேங்காமரத்துபட்டி)

பதில்: 'டைமிங்'கில் வரும் 'ரைமிங்' வசனங்கள் தான்!

கேள்வி: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழாவில் தமன்னாவின் நடனத்தை பற்றி திரை உலகினர் என்ன பேசுகிறார்கள்? (ஜெயபாண்டியன், தளவாய்புரம்)

பதில்: 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை' என்று பெருமையாக பேசுகிறார்கள்!

கேள்வி: 'கிசுகிசு'க்களில் கார்த்தி சிக்குவதில்லையே, எப்படி? (உலகநாயகி, தேவிபட்டினம்)

பதில்: 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பதை உணர்ந்தவர், கார்த்தி!

கேள்வி: கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இவர்களில் யார் மூத்தவர்? (ஈரோடு குமரன், எஸ்.எஸ்.பி.நகர்)

பதில்: பிறப்பால் முந்திய கண்ணதாசனை, இறப்பால் முந்தியவர் பட்டுக்கோட்டையார்!

கேள்வி: தற்போதைய படங்களில் திரைக்கதையால் பாராட்டப்படும் இயக்குனர் யார்? (வசந்தன், வாணியம்பாடி)

பதில்: வெற்றிமாறன்!

கேள்வி: மலையாள இளம் நடிகை அனு சித்தாரா கொள்ளை அழகாக இருக்கிறாரே, அவருக்கு மூக்குத்தி பரிசளிக்கலாமா? (கோ.பாலு, புரசைவாக்கம், சென்னை)

பதில்: கிளி போன்ற அவரது மூக்கை குறிவைக்கிறீர். கணவர் அனுமதியுடன் தான் அதை வாங்கி கொள்வாராம்!

கேள்வி: வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் என்ன செய்வார்கள்? (அருணா ரவிக்குமார், தேனி)

பதில்: 'போட்டோ ஷூட்' என்ற பெயரில் அரைகுறை ஆடையுடன் கடலோரம் கரை ஒதுங்குவார்கள்!

கேள்வி: 'பத்து தல' படத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பை அவரது மனைவி பாராட்டினாரா? (எஸ்.ஏ.அஞ்சனா, ஜெய்ஹிந்த்புரம், மதுரை)

பதில்: 'சமத்து... சேட்டையெல்லாம் செய்யாம, ஒழுங்கா இனிமே இப்படியே நடிக்கனும், சரியா...' என மனைவி மஞ்சிமா கொஞ்சலுடன் சொல்கிறாராம்!

கேள்வி: 'உருண்டை விழி' கண்ணழகி விசாகா சிங் எங்கே இருக்கிறார்? (வினோத்குமார், காரைக்கால்)

பதில்: தெலுங்கு படங்களில் ஆர்வம் காட்டி வருவதால், விசாகப்பட்டினத்தில் தஞ்சமாகி இருக்கிறார்!

கேள்வி: எஸ்.ஜே.சூர்யா ஏன் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார்? (எஸ். ஊர்மிளா, சேலம்)

பதில்: 7-ம் எட்டில் அடியெடுத்து வைக்கவுள்ள அவரால் மீண்டும் 3-ம் எட்டுக்கு திரும்ப முடிய வில்லையாம்!

கேள்வி: நடிகர் கலையரசனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (ராவணன், திருச்சி)

பதில்: திறமை இருந்தும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் நடிகர்களில் அவரும் ஒருவர்!

கேள்வி: பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பது எப்போது? (அறிவுமணி, ஆத்தூர்)

பதில்: அந்த கவர்ச்சி புயலின் எதிர்பார்ப்பு இங்கு ஈடேறவில்லை. அதனால் மீண்டும் பாலிவுட்டுக்கே பறந்துவிட்டார்!

கேள்வி: நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகியோரில் யாருடைய இடுப்பு எடுப்பாக இருக்கும்? (ஜெ.மணிகண்டன், ஏ.கஸ்பா, ஆம்பூர்)

பதில்: திரிஷா. ஆடை வடிவமைப்பாளர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்!

கேள்வி: சின்னத்திரையில் அலப்பறை காட்டும் அமீரும், பாவனியும் திருமணம் செய்துகொள்வார்களா, இல்லையா? (சுடர்மணி, உக்கடம், கோவை)

பதில்: அதுபற்றி நன்றாக யோசித்து முடிவு எடுக்கத்தான், இருவரும் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகிறார்கள். சீக்கிரம் நல்ல செய்தி வரும்!

கேள்வி: காதல் படங்களுக்கு மத்தியில், இரு உள்ளங்களுக்கிடையே உள்ள அன்பை சொன்ன படம் இருக்கிறதா? (நாசர், கழுகுமலை)

பதில்: 'முதல் மரியாதை'. வயதான, இளமையான 2 உள்ளங்களின் மாசற்ற அன்பை வெளிப்படுத்திய படம் அது!

கேள்வி: ஐஸ்வர்யா ராஜேஷ் சைவமா? அசைவமா? (பி.பி.பாஸ்கர், திண்டுக்கல்)

பதில்: தீவிர அசைவ பிரியை. கடல் உணவுகள் என்றால் கொள்ளை பிரியம்!

கேள்வி: சந்தானம் நடித்து வரும் 'டி.டி. ரிட்டர்ன்ஸ்' படம் என்ன மாதிரியான கதையை கொண்டது? (ஆண்டனிராஜ், மில்லர்புரம், தூத்துக்குடி)

பதில்: நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி வருகிறது!

மேலும் செய்திகள்