சினிமா கேள்வி-பதில்கள் - குருவியார்
|உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி: 'நாயகன்' ரீமேக்கில் நடிக்க தகுதியுடையவர் யார்? (ராமச்சந்திரன், கழுகுமலை)
பதில்: வேலுநாயக்கர் கதாபாத்திரத்துக்கு 'உலகநாயகன்' தவிர வேறு யாரும் பொருந்த மாட்டார்கள்!
கேள்வி: சமீபத்தில் ஒரு 'வெப்' தொடரில் அஞ்சலிக்கு அண்ணியாக சோனியா அகர்வால் நடித்திருந்தாரே... (கண்மணி, தூத்துக்குடி)
பதில்: கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் தெருவுக்கு வந்துவிட வேண்டி இருக் கும் என்பது அவருக்கு தெரியாமல் போய்விடுமா..!
கேள்வி: சமந்தாவுக்கு விருந்து அளிக்க ஆசைப்படுகிறேன். என்ன உணவு அவருக்கு பிடிக்கும்? (ஆரோக்கியம், திருச்சி)
பதில்: சமந்தாவுக்கு, ஜப்பான் நாட்டு உணவான 'சூஷி' தான் ரொம்ப பிடிக்குமாம். உணவு மட்டும் தான் ஜப்பான் பாணி. மத்ததெல்லாம் நம்ம ஊர் பாணி தான்!
கேள்வி: செல்லப்பிராணிகள் மீது திரிஷா ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறார்? சொல்லுங்கள் குருவியாரே... (கலா, ராமநாதபுரம்)
பதில்: மனிதர்களை விட செல்லப்பிராணிகளே அவரிடம் உண்மையாக இருக்கிறதாம். அதனால் தான் இவ்வளவு பாசமாம்!
கேள்வி: குருவியாரே... யாஷிகா ஆனந்த் முன்பை விட தற்போது அதிக கவர்ச்சியாக நடிக்கிறாரே? (டி.கந்தன், நாமக்கல்)
பதில்: கவர்ச்சியின் எல்லை எது? என்பதை 'தொட்டு' பார்த்து விட வேண்டும் என்ற ஆசையாம் அவருக்கு..!
கேள்வி: 'முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல...' என்ற பாடல் இடம் பெற்ற படம் எது? பாடியவர்கள் யார்? (விக்ரம், மதுரை)
பதில்: கவித்துவமான இந்த பாடல் இடம் பெற்ற படம் 'உத்தமபுத்திரன்' (1958-ம் ஆண்டு). ஜி.ராமநாதன் இசையில் டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடியிருந்தனர்!
கேள்வி: அமலாபால் முன்பு போல இப்போது படங்களில் நடிப்பதில்லையே.. (சங்கரி, சென்னை)
பதில்: அமலாபாலின் மனதை சிலர் காயப்படுத்தி விட்டார்களாம். இதனால் மன அமைதிக்காக சினிமாவை விட்டு சில காலம் விலகி இருக்க முடிவாம்!
கேள்வி: 'மேக்கப்' போடாமல் சினிமாவில் நடிக்கவே முடியாதா? (டி.மஞ்சுளா, கோவை)
பதில்:- ஏன் முடியாது? 1967-ம் ஆண்டு சி.வி.ஸ்ரீதர் இயக்கத்தில் 'நெஞ்சிருக்கும் வரை' படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த சிவாஜி கணேசன், முத்துராமன், கோபாலகிருஷ்ணன், ராகவன், கே.ஆர்.விஜயா, கீதாஞ்சலி உள்பட நடிகர்-நடிகைகள் யாருமே 'மேக்கப்' போடாமல் தான் நடித்தார்கள். படமும் நன்றாக ஓடியதே..!
கேள்வி: சத்யராஜ் மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்? கதாநாயகி தேர்வு கூட நடந்துவிட்டதாமே? (ஆர்.கண்ணன், காரைக்கால்)
பதில்: இப்படி ஒரு தகவலை சமூக வலைத்தளத்தில் முதலில் பார்த்தபோது சத்யராஜை சந்தோஷம் தொற்றி கொண்டதாம். ஆனால் அதில் உண்மை தான் இல்லை!
கேள்வி: தமிழ் சினிமாவின் அழகான அம்மா நடிகை யார்? (வாசுதேவன், கீழப்பாவூர்)
பதில்: சந்தேகமே வேண் டாம், சரண்யா பொன்வண்ணன் தான்!
கேள்வி: சிறந்த நடிகரான விஜய் சேதுபதி, படங்களை தேர்வு செய்வதில் தவறு செய்கிறாரா? (மரகதம், திண்டிவனம்)
பதில்: ரசிகர்களிடம் இருந்து இதே கருத்து வருவதால், இனி கிடைக்கும் படங்களில் எல்லாம் தலை காட்டாமல், நல்ல படங்களையே தேர்வு செய்து நடிக்க இருக்கிறாராம்!
கேள்வி: ரகுல் பிரீத் சிங்கை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஏதாவது 'கண்டிஷன்' வைத்திருக்கிறாரா? (மோனிஷா, கூடலூர்)
பதில்: ஒன்றல்ல மூன்று இருக்கிறது. முதலாவது, மணமகன் நன்றாக தெலுங்கு பேச-எழுத வேண்டுமாம். இரண்டாவது 6 அடி உயரம் இருக்க வேண்டுமாம். மூன்றாவது மிக முக்கியம். பார்த்தவுடன் 'பொறி' தட்டுகிற மாதிரி இருக்கவேண்டுமாம். இப்படிப்பட்ட மணமகனை தான் அவரும் தேடி வருகிறார்!
கேள்வி: மக்கள் நாயகன் ராமராஜன் நடித்துள்ள 'சாமானியன்' படம் எப்போது திரைக்கு வரும்? (கமலி வெங்கட், ஆட்டையாம்பட்டி)
பதில்: இந்த படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவது குறித்து படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தகவல். இன்னும் ஓரிரு மாதங்களில் எதிர்பார்க்கலாம்!
கேள்வி: 'எங்கே தேடுவேன்... பணத்தை, எங்கே தேடுவேன்...' என்ற பாடல் இடம்பெற்ற படம் எது? பாடியவர் யார்? (ராஜகோபால், தூத்துக்குடி)
பதில்: 1952-ம் ஆண்டு வெளியான 'பணம்' என்ற படத்தில் இப்பாடல் இடம்பெற்றது. படத்தை இயக்கி, நடித்து, அந்த பாடலை பாடியவரும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தான். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்!
கேள்வி: நகைச்சுவை கதாபாத்திரங்களில் முத்திரை பதிக்கும் நடிகை யார்? (குமரவேல், விழுப்புரம்)
பதில்: டி.ஏ.மதுரம், மனோரமா, சச்சு, கோவை சரளாவுக்கு பிறகு சினிமாவில் நகைச்சுவையில் பெரியளவில் நடிகைகள் ஜொலிக்கவில்லை. அவ்வப்போது வருபவர் களும் 'டிரெண்டு'க்கு தகுந்தபடி சிரிப்பையும், கவர்ச்சியையும் ஒரு சேர காட்டி மறைந்து போய்விடுகிறார்கள்!
கேள்வி: மனதில் தோன்றியதை 'பட்'டென சொல்லும் நடிகை யார்? (மகாலட்சுமி, ஈரோடு)
பதில்: ஒளிவு மறைவில்லாத ஓவியா தான்!
கேள்வி: நடிகர் ஜீவா விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டாரே? (அ.முகைதீன் அசாருதீன், திரேஸ்புரம்)
பதில்: ஒரு கட்டத்தில் எல்லா நடிகர்களுமே செய்தது தான், செய்வது தான்...!