< Back
சினிமா செய்திகள்
சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்
சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்

தினத்தந்தி
|
14 Aug 2023 12:06 PM IST

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in

கேள்வி: குருவியாரே... ராஷ்மிகா மந்தனாவின் தாய்மொழி கன்னடம் தானே? (எஸ்.அமிர்தா, ஆலங்குடி)

பதில்: இல்லை. கொடவா தக். இது தமிழ், மலையாளம் மொழிகளின் கலவையாகும்!

கேள்வி: மிகவும் கண்டிப்பான போக்குவரத்து போலீஸ் அதிகாரி வேடத்துக்கு எந்த நடிகை பொருந்துவார்? நன்றாக யோசித்து சொல்லுங்கள் குருவியாரே... (சிலம்பரசன், காஞ்சீபுரம்)

பதில்: யாஷிகா ஆனந்த். இவர் கையை தூக்கினாலே போதும். எந்த வண்டியும் 'சரண்டர்' தான்!

கேள்வி: நடிகைகளின் வெற்றி எதனைப் பொறுத்து அமைகிறது? (ேமடலின் ஜூலி, காயல்பட்டினம்)

பதில்: ரசிகர்களின் நினைவிலும், கனவிலும் வந்து கட்டிப்போடும் போது!

கேள்வி: உதயநிதி ஸ்டாலின் இனி நடிக்க மாட்டாரா? (அர்த்தனா குமரன், ஈரோடு)

பதில்: வாய்ப்பு இல்லை. அமைச்சர் பொறுப்பு பெரிதல்லவா..!

கேள்வி: சினிமா தயாரிப்பில் இறங்கிய பிரபலங்களில் துட்டு பார்த்தவர்கள் அதிகமா, கையை சுட்டுக்கொண்டவர்கள் அதிகமா? (ஆர்.எம். கதிரவன், பிள்ளையார்பட்டி)

பதில்: இரண்டு ரகமும் உண்டு. சுட்டுக்கொண்டவர்கள் கொஞ்சம் அதிகம் தான்!

கேள்வி: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழ் படத்தில் எப்போது நடிப்பார்? (அட்டிகை தேவராஜன், தேனி)

பதில்: அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்!

கேள்வி: பாலிவுட் நடிகை பூஜா பலேக்கர் என் கனவில் அடிக்கடி வருகிறார். என்னவாக இருக்கும் குருவியாரே... (எஸ்.துரை, ஸ்ரீரெகுநாதபுரம், நெல்லை)

பதில்: ஒற்றை காலை வான் நோக்கி உயர்த்தி அவர் ஆசனம் செய்ததை பார்த்து அசந்துவிட்டீர் போலும்..!

கேள்வி: குருவியாரே... சாய் பல்லவி எதற்காக 'திடீர்' ஆன்மிக பயணம் மேற்கொள்கிறார்? (கார்த்திக், வேலூர்)

பதில்: தோல்விகளால் புண்பட்ட மனதை பண்படுத்தத்தான்!

கேள்வி: 'கல்கி' படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார்? (தேவகி, வாடிப்பட்டி)

பதில்: உலகநாயகனே ஒத்துக்கொண்டார் என்றால், அந்த கதாபாத்திரம் எப்படி 'வெயிட்'டாக இருக்கும்? என்பதை யூகித்து பாருங்களேன்!

கேள்வி: சினிமாவுக்கு இன்னொரு வாரிசு நடிகை வருகிறாராமே... அது யார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்: ரோஜா தோட்டத்தில் இருந்து வருவதாக தகவல்!

கேள்வி: 'இளம் கதாநாயகிகள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்ள கூடாது' என இந்தி நடிகை கஜோல் கூறுகிறாரே.. (சொர்ணம், ஊட்டி)

பதில்: சீனியர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அனுபவமே படிப்பல்லவா..!

கேள்வி: வடமாநிலங்களில் பெரிய அளவில் வெற்றிக்கொடி நாட்டிய முதல் தென்னிந்திய படம் எது? (டி.ஆர்.முத்துக்குமார், விழுப்புரம்)

பதில்: 1948-ம் ஆண்டில் வெளியான 'சந்திரலேகா'!

கேள்வி: விஜயகாந்த் பற்றி தெரியாத தகவல் சொல்லுங்கள் குருவியாரே... (ஆசைத்தம்பி, நாட்டரசன்கோட்டை)

பதில்: தாய்மொழி தமிழைத் தவிர வேறு எந்த மொழி திரைப்படங்களிலும் நடிக்காத நடிகர்!

கேள்வி: 'சில்மிஷம்' செய்து நடிப்பதில் கில்லாடி நடிகர் யார்? (ரெங்கசாமி, வடுகப்பட்டி, தேனி)

பதில்: 'பாஸ்' நடிகரின் பெயர் அடிபடுகிறது!

கேள்வி: ஓ.டி.டி.யில் படம் பார்ப்பதற்கும், சினிமா தியேட்டரில் படம் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? சொல்லுங்கள் குருவியாரே... (அ.யாழினி பர்வதம், சென்னை-78)

பதில்: ஓ.டி.டி.யில் படத்தை நிறுத்தி நிறுத்தி பார்க்கலாம். தியேட்டரில் மனதில் காட்சி களை நிறுத்தி ரசித்து பார்க்கலாம். அந்த அனுபவமே வேறு!

கேள்வி: கவர்ச்சி குத்து பாடலுக்கு ஆட ஷ்ரேயா ரூ.1 கோடி கேட்கிறாராமே... (உத்தமன், திருச்சி)

பதில்: ரசிகர்களின் பார்வையை சுண்டி இழுக்கும் வித்தையில் கெட்டிக்காரராம். அதான் இந்த ரேட்டு!

கேள்வி: தெலுங்கு சினிமாவில் மொழி தெரியாதவர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாக நடிகை ஈஷா ரெப்பா ஆதங்கம் தெரிவித்துள்ளாரே... (நிலவரசன், தஞ்சாவூர்)

பதில்: வெளியூர் ஆட்டக்காரர்களை பார்த்தால் உள்ளூர் ஆட்டக்காரிக்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும்!

கேள்வி: குருவியாரே... பாலிவுட் நடிகை நேஹா துபியாவின் வனப்புக்கு என்ன காரணம்? (மாணிக்கம், திருப்பூர்)

பதில்: கேரளத்து ஓமணக்குட்டி அவர். வனப்புக்கா பஞ்சம்..!

கேள்வி: ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும், கமல்ஹாசன் வில்லனாகவும் நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும்? (சங்கீத சரவணன், மயிலாடுதுறை)

பதில்: ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கனவுப்படமாக இருக்கும்!

கேள்வி: நவரச நாயகன் கார்த்திக் என்ன செய்கிறார்? (பொன்ராம், பழனி)

பதில்: டைரக்டர் ஆகும் ஆசையில் ஒரு கதையை தயார் செய்து வருகிறாராம்!

கேள்வி: நடிகை சித்தி இத்னானியின் சமீபத்திய புகைப்படங்களில் அவரது கன்னக்குழி 'மிஸ்' ஆகியிருக்கிறதே... பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரோ... (மோகனசுந்தரம், நெய்வேலி)

பதில்: அப்படியெல்லாம் இல்லையாம். அது கோபம் கலந்த சிரிப்பாம். அதான் கன்னக்குழி 'மிஸ்' ஆகியிருக்கிறது!

கேள்வி: தமிழில் டால்பி தொழில்நுட்பத்தில் வெளியான முதல் திரைப்படம் எது? (உலகநாயகி, தேவிப்பட்டினம்)

பதில்: 'குருதிபுனல்' (1995)!

கேள்வி: தமிழ் சினிமாவில் அதிக படங்களில் துணை நடிகையாக நடித்தவர் யார்? (மேகனா, மார்த்தாண்டம்)

பதில்: தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகளவில் பார்த்தாலும் மனோரமா பெயர் தான் முதலிடத்தில் இருக்கிறது!

கேள்வி: 'தமிழ் திரையுலகம் என்னை சுத்தமாக மறந்துவிட்டது', என்று ராய்லட்சுமி வருந்தி இருக்கிறாரே? (ஜெ.மணிகண்டன், ஆம்பூர்)

பதில்: மறப்பது சகஜம் தானே..!

மேலும் செய்திகள்