சினிமா கேள்வி-பதில்கள்: குருவியார்
|உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. சினிமா கேள்வி-பதில்கள், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை -600007, வாட்ஸ் அப் எண்: 7824044499, மின்னஞ்சல்: cinema@dt.co.in
கேள்வி: சின்னத்திரையில் தற்போது உலா வரும் அந்த கவர்ச்சி நடிகை 'என் இதயம் ஒரு வெற்று காகிதம்' என்று கவலையுடன் சொல்ல காரணம் என்னவோ... (ஊர்மிளா ஜெயராஜன், மயிலாப்பூர், சென்னை)
பதில்: அதில் யாரும் எழுதவில்லையாம். கசக்கியவர்களே அதிகமாம்!
கேள்வி: சமீபகாலமாக நடிகர் சித்தார்த் அரசியல் கருத்துகள் கூறாமல் அமைதியாக இருக்கிறாரே, ஏன்? (பத்மநாபன், பண்ருட்டி)
பதில்: 'பட்டது போதும்', என்று பதுங்கிவிட்டார்!
கேள்வி: 'துள்ளுவதோ இளமை' நாயகி ஷெரின் சின்னத்திரைக்கு வந்துவிட்டாரே... (ராவண பெருமாள், மதுரை)
பதில்: இனி 'அள்ளுவதே திறமை' என்பதை புரிந்து கொண்டதால்தான்..!
கேள்வி: பாலிவுட் நடிகை உர்பி ஜாவெத் தனது உடல் முழுவதும் பேஸ்ட்டை பூசிக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டுள்ளாரே... (வடிவேல் முருகன், பழனி)
பதில்: பல் போல உடலும் பளிச்சிடும் ரகசியம் அதுதானாம். எது எப்படியோ ரசிகர்களுக்கு குஷிதானே..!
கேள்வி: 100 நாட்கள், 200 நாட்கள் என்ற வெற்றி பட 'போஸ்டர்'களை இனி பார்க்கவே முடியாதா? (கண்ணன், திருச்சி)
பதில்: வாய்ப்பே இல்லை கண்ணா..!
கேள்வி: நடிகை ஷோபனாவுக்கு திருமணம் நடக்குமா? (கோ.பாலு, புரசைவாக்கம்)
பதில்: பூட்டிய கதவருகே பூட்டாத கனவுகளுடன் நிற்கிறார்!
கேள்வி: தமிழில் பாடல்கள் இல்லாமல் வந்த முதல் படம் எது? (எச்.பகதூர், ஜமாலியா லைன்)
பதில்: 1954-ம் ஆண்டு வெளியான 'அந்த நாள்'. சிவாஜிகணேசன், பண்டரிபாய் நடித்துள்ள அந்த படத்தை எஸ்.பாலசந்தர் இயக்கியிருந்தார்!
கேள்வி: சமந்தாவுக்கு மீண்டும் காதல் வந்துள்ளதாக கூறப்படுகிறதே? உண்மையா குருவியாரே... (கார்த்திக், நாமக்கல்)
பதில்: உடைந்த இதயத்தை ஒட்டவைக்க ஒருவர் கிடைப்பாரா? என்ற எதிர்பார்ப்பில்தான் இருக்கிறார்!
கேள்வி: குருவியாரே... தமன்னா கவர்ச்சிக்கு துணிந்து விட்டாரே... (ரவிச் சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: இழந்ததையும் அடைந்துவிடும் முடிவுக்கு வந்துவிட்டார்!
கேள்வி: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழ் படத்தில் எப்போது நடிப்பார்? (அட்டிகை தேவராஜன், தேனி)
பதில்: அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்!
கேள்வி: 'ஆஸ்கார்' விருது கமிட்டியில் மணிரத்னம் பெயர் இடம்பெற்றது பற்றி... (உலகநாயகி, தேவிப்பட்டினம்)
பதில்: உழைப்பால் மேம்பட்ட தகுதிக்கு கிடைத்த சான்று!
கேள்வி: அசினின் விவாகரத்து மறுப்பு விளக்கம் எப்படி? (ஆனந்த செல்வம், கும்பகோணம்)
பதில்: 'ஈயம் பூசுனது மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்', என்ற கவுண்டமணி காமெடியை நினைவூட்டுகிறது!
கேள்வி: விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படப்பிடிப்பு எந்த கட்டத்தில் இருக்கிறது? (சூர்யபிரகாஷ், பம்மனேந்தல்)
பதில்: படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பொங்கல் பண்டிகைக்கு 'ரிலீஸ்' செய்ய திட்டமாம்!
கேள்வி: நடிகைகளின் வெற்றி எதனை பொறுத்து அமைகிறது? (ஆர்.ரங்கசாமி, வடுகபட்டி, தேனி)
பதில்: ரசிகர்களின் நினைவிலும், கனவிலும் வந்து கட்டிப்போடும் போது!
கேள்வி: சினிமா தயாரிப்பில் இறங்கிய பிரபலங்களில் துட்டு பார்த்தவர்கள் அதிகமா, கையை சுட்டுக்கொண்டவர்கள் அதிகமா? (சங்கீத சரவணன், மயிலாடுதுறை)
பதில்: இரண்டு ரகமும் உண்டு. சுட்டுக்கொண்டவர்கள் கொஞ்சம் அதிகம் தான்!
கேள்வி: இயக்குனர் ஷங்கரிடம் உள்ள புத்திசாலித்தனமான விஷயம் என்ன குருவியாரே.. (க.சுதா, அம்பத்தூர், சென்னை)
பதில்: இயக்கும் படங்களில் காட்டும் பிரமாண்ட செலவை, தயாரிக்கும் படங்களில் காட்டாத பக்குவம் தான்!
கேள்வி: வெள்ளிவிழா படங்களை தந்த ஆர்.சுந்தரராஜன் முழுநேரமாக சின்னத்திரைக்கு வந்துவிட்டாரே... (கே.எம்.ஸ்வீட் முருகன், கரடிகொல்லப்பட்டி, கிருஷ்ணகிரி)
பதில்: மக்களின் உள்ளங்களில் என்றும் நிறைந்திருக்க வேண்டும் என்ற நினைப்பு தான் காரணம்!
கேள்வி: வடிவேல் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா? (அ.சேக் முகமது, வேடசந்தூர்)
பதில்: 'மாமன்னன்' படம் அந்த நம்பிக்கையை அவருக்குள் விதைத்திருக்கிறது!
கேள்வி: 'நக்கல் மன்னன்' கவுண்டமணி என்ன செய்கிறார்? (த.நேரு, வெண்கரும்பூர்)
பதில்: 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்கிறார்!
கேள்வி: இசையமைப்பாளர் தேவா இசையமைத்த முதல் படம் எது? (கார்த்திகா, தாமரைப்பாக்கம்)
பதில்: ராமராஜன் - சீதா நடித்த 'மனசுக்கேத்த மகராசா' (1989)!
கேள்வி: 'சின்ன கவுண்டர்' படத்தில் சுகன்யா தொப்புளில் விஜயகாந்த் பம்பரம் விடுவாரே, ஆணி குத்தியிருக்குமோ? (பெனிக்ஸ், திண்டுக்கல்)
பதில்: நியாயமான கவலைதான். பல 'டேக்'குகள் சென்றதில் ஆணியின் கூர்மை தேய்ந்துவிட்டதா? காயம் எதுவும் இல்லையா என்றும் கேட்பீரோ..!
கேள்வி: கடந்த 63 ஆண்டுகளில் முதன்முறையாக 'ஹாலிவுட்' முடங்கியிருப்பதாக கூறப்படுகிறதே, ஏன்? (அவந்திகா, ஆரணி)
பதில்: சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹாலிவுட் எழுத்தாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் நடிகர்-நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் 'ஹாலிவுட்' முடங்கிப் போயிருக்கிறது!
கேள்வி: கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' என்ன மாதிரியான கதையம்சம் கொண்ட படம்? (தி.முருகன், பழனி)
பதில்: கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம். சமூக பிரச்சினைகளை மையமாக கொண்டு தயாராகிறது!
கேள்வி: திரை பிரபலங்கள் ஓய்வு எடுக்க அடிக்கடி மாலத்தீவுக்கு செல்கிறார்களே, என்ன விசேஷம்? (மாணிக்கம், ஊத்தங்கரை)
பதில்: ஓய்வுக்காக இல்லை. ஒருவகையான விளம்பரம் தான். மாலத்தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக திரை பிரபலங்களுக்கு இலவசமாகவே அனுமதி வழங்கப்படுவதாக தகவல்!
கேள்வி: கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் உள்ள வேறுபாடு என்னவோ, சொல்லுங்கள் குருவியாரே? (முத்துக்குமார், விழுப்புரம்)
பதில்: லைட்டா அணைப்பதற்கும், 'லைட்'டை அணைப்பதற்கும் உள்ள வித்தியாசம் தான்!
கேள்வி: 'முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்', என்று பிரியாமணி பிடிவாதமாக சொல்லியிருக்கிறாரே... (மல்லிகா நடராஜன், திருவண்ணாமலை)
பதில்: கணவருக்கு பதில் சொல்லியாக வேண்டுமாம், அதான்!