டாப்சி பகிர்ந்த சினிமா அனுபவம்
|தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த டாப்சி இப்போது இந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில், "நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள சீனியர் யாரும் இல்லை. சினிமாவில் இருப்பவர்கள் ஒருவரையும் தெரியாது. ஆனால் அவர்களை எட்ட இருந்தே பார்த்து அவர்கள் வேலைகளை கவனித்து என்னை பக்குவப்படுத்திக்கொண்டேன். என் மனம் சொல்லியபடியே நடந்து கொண்டேன். ஒவ்வொருவரும் அவரது சொந்த பார்முலாவோடு தான் வர வேண்டும். நானும் அதை தான் செய்தேன். வெற்றிகளுக்கு நிச்சயமாக ஒரு விலை இருக்கும். நடிகையான பிறகு நான் வீட்டு கதவுகளை திறந்து கொண்டு வெளியே சென்றால் என் மீது எத்தனையோ கண்கள் இருக்கும்.
என்னை கணிக்க எத்தனையோ பேர் தயாராக இருப்பார்கள். எனது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பார்கள். நான் நான்கு சுவர்களுக்கு வெளியே எந்த சிறிய தவறு செய்தாலும் கண்டுபிடிக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் தான் கவனமாக இருக்கிறேன். எனக்கு வெற்றிகள் கிடைத்துள்ளது. ஆனால் இத்தனை வெற்றிகளுக்கு நான் செலுத்திய விலை மிக அதிகம்" என்றார்.