கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிரஞ்சீவி - எதற்காக தெரியுமா?
|நடிகர் சிரஞ்சீவிக்கு அமீர் கான் கின்னஸ் விருதை வழங்கி கவுரவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவர் இதுவரை 156 படங்கள் நடித்து இருக்கிறார். 1978 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி வெளியான 'பிராணம் கரீது' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார்.
இந்திய திரையுலகில் மிகவும் வெற்றிகரமான திரைப்பட நட்சத்திரமான மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்பொழுது கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது, இவர் இதுவரை 537 பாடல்களில் 24,000 நடன அசைவுகளை 156 படங்களில் 45 வருடங்களுக்குள் செய்ததால் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர். சிரஞ்சீவியின் 156 படங்களில், கின்னஸ் குழுவினரால் 143 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதை பாலிவுட் நடிகர் அமீர் கான் வழங்கி சிரஞ்சீவியை கவுரவித்தார். நேற்று இந்த விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவரது மகள் சுஷ்மிதா கொனிடேலா மற்றும் வருண் தேஜ், சாய் தரம் தேஜ் மற்றும் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவரது மருமகளும், ராம் சரணின் மனைவியுமான உபாசனா காமினேனி கொனிடேலா, நிகழ்வின் படங்களைப் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விருதை பெற்ற நடிகர் சிரஞ்சீவி, "என்னுடைய சினிமா பயணத்தில் நான் கின்னஸ் சாதனையெல்லாம் செய்வேன் என எதிர்பார்த்தது இல்லை. இது தற்செயலாக அமைந்த ஒன்று. என்னுடைய தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் மற்றும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.
மெகாஸ்டார் சிரஞ்சீவி அடுத்ததாக 'விஸ்வம்பரா' படத்தில் நடிக்கிறார். மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.