மீண்டும் அஜித் படத்தின் 'ரீமேக்'கில் சிரஞ்சீவி
|அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்' படத்தையும் தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க ஆர்வம் காட்டுகிறார். ஏற்கனவே விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கைதி நம்பர் 150' என்ற படத்தில் நடித்தார். பின்னர் மலையாளத்தில் மோகன்லால் நடித்து வசூல் குவித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் பெரிய வரவேற்பை பெற்றன. தற்போது அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் 'போலோ சங்கர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தையும் தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கத்தி ரீமேக்கை இயக்கிய பி.வி.விநாயக் விஸ்வாசம் தெலுங்கு ரீமேக்கையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.