விசாரணைக்கு வந்த இடத்தில் ரசிகைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்ட செல்லம்மா சீரியல் ஹீரோ
|சென்னை:
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா (வயது 29). இவரது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். 'கேளடி கண்மணி' என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், 'மகராசி' என்ற தொடரிலும் நடித்து பிரபலமானார்.
இவரும், தற்போது மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' என்ற தொடரில் நடித்து வரும் அரணவ்(33) என்பவரும் 2017-ல் ஒரே தொடரில் நடித்த போது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது நடிகை திவ்யா கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அரணவ் அடித்ததில் கீழே விழுந்த திவ்யாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதற்காக திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் போரூர் மகளிர் போலீசார் நடிகை திவ்யாவிடம் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், கணவர் தன்னை அடித்ததால் எப்போது வேண்டுமானாலும் தனது கரு கலையலாம் என்றும் நடிகை திவ்யா, 2 வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் அரணவ், தனது மனைவி திவ்யா மீது ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை நேற்று அளித்தார். இந்த புகார் மனு குறித்து விசாரிக்கும்படி போரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பேரில் போரூர் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் நடிகை திவ்யா அளித்த புகார் தொடர்பாகவும், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்த புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே விசாரணைக்கு பின் வெளியே வந்த நடிகர் அரணவ் உடன் பெண் ரசிகைகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது வியப்பை ஏற்படுத்தியது.