'சந்திரமுகி 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' திரைப்படம் பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் கங்கனா ரணாவத் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் வடிவேலு, லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பி.வாசு இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
இந்த நிலையில், 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.