தணிக்கை குழு ஆட்சேபம்... அஜித்குமார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கம்
|துணிவு படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து சர்ச்சை காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவற்றை நீக்கி உள்ளனர்.
பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ள அஜித்குமாரின் 'துணிவு' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லரில் அஜித்குமார் வங்கிக்கு சென்று பணத்தை கொள்ளையடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எனவே துணிவு படம் வங்கி கொள்ளையை மையப்படுத்திய கதையம்சத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சுவாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வினோத் டைரக்டு செய்துள்ளார். இந்த நிலையில் துணிவு படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து சர்ச்சை காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து அவற்றை நீக்கி உள்ளனர். குறிப்பாக படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வசனங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில் சர்ச்சை வசனங்கள் கேட்காத அளவுக்கு 'பீப்' செய்து உள்ளனர். மொத்தம் 17 இடங்களில் பீப் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காசேதான் கடவுளடா பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு வார்த்தையையும் நீக்கி உள்ளனர். சர்ச்சை வசனங்களை நீக்கியும், பீப் போட்டும் முடித்த பிறகு துணிவு படத்துக்கு தணிக்கை குழுவினர் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் துணிவு படம் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் 48 நொடிகள் ஓடக்கூடிய வகையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.