"மஞ்சுமல் பாய்ஸ்" தயாரிப்பாளர்கள் மீதான வழக்கு - கேரள ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
|மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
திருவனந்தபுரம்,
மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சவுபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்தனர். கேரளாவில் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
மஞ்சுமல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரரான ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக தான் 7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும், ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது வரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும், முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டதுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் 3 பேர் மீதும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மரடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் தயாரிப்பாளர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, 3 பேரையும் வருகிற 22-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கேரள அரசுக்கு நோட்டீசையும் அனுப்பியுள்ளது.