நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு - அக்டோபர் 14-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
|நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை அக்டோபர் 14-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கடனை திருப்பி செலுத்தாததால் நடிகர் விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது லைகா நிறுவனம் தரப்பில், "சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் தாக்கல் செய்யவில்லை" எனக் கூறப்பட்டது.
அதே சமயம் விஷால் தரப்பில், "இந்த வழக்கில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளதால், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து லைகா தரப்பில், "தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்காததால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பின்னர் இந்த மனுவை விசாரிப்பதாக கூறி, விசாரணையை அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.