உலகளவில் புதிய சாதனைகள் படைக்கும் தனுஷின் "கேப்டன் மில்லர்"
|நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.
சென்னை,
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் கடந்த மாதம் 12-ந் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் வாரத்தில் ரூ.61 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இந்த படத்தின் கதை நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தி எழுதிய 'பட்டத்துயானை' நாவலின் கதையை திருடி எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து நடிகர் வேல ராமமூர்த்தியும் இதுகுறித்து காட்டமாக பேட்டியில் பேசினார். ஆனால் படக்குழு தரப்பில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
திரையரங்குகளில் வெற்றி பெற்ற கேப்டன் மில்லர் படம், கடந்த பிப்ரவரி 9 -ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது. நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான "கேப்டன் மில்லர்" திரைப்படம், 40 நாட்களை கடந்தும், உலகளவில் 9-க்கும் மேற்பட்ட நாடுகளில் டாப் 5 வரிசையில் இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.