< Back
சினிமா செய்திகள்
கேப்டன் மில்லர் என்னுடைய கதை... கூச்சமே இல்லாமல் திருடியுள்ளனர் - நடிகர் வேல ராமமூர்த்தி குற்றச்சாட்டு
சினிமா செய்திகள்

'கேப்டன் மில்லர் என்னுடைய கதை... கூச்சமே இல்லாமல் திருடியுள்ளனர்' - நடிகர் வேல ராமமூர்த்தி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
21 Jan 2024 3:30 PM IST

கேப்டன் மில்லர் படம் கடந்த 12-ந் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

சென்னை,

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த 12-ந் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் வாரத்தில் ரூ.61 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தி எழுதிய 'பட்டத்துயானை' நாவலின் கதையை திருடி எடுக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை டிஸ்கவரி பதிப்பத்தின் பதிப்பாளர் வேடியப்பன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த பதிவில், 'சமீபத்தில்தான் தமிழ் திரைத்துறையை சார்ந்த இயக்குனர்கள் கொஞ்சம் வாசிப்பு பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்று இப்போதுதான் பலரிடமும் மகிழ்ச்சியாக பேச முடிகிறது.

புதிய நூல்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். வாசிப்பு என்பது தங்களது அறிவை, கலை கலாச்சாரத்தை புரிந்துகொண்டு புதியன படைப்பதற்காக இருக்க வேண்டும். அப்படித்தான் பலரும் இருக்கிறார்கள். ஆனால் சிலர் அப்படியே காப்பி அடித்து பணம் சம்பாதிக்க என்று புரிந்துகொள்வது ஆபத்தானது.சமீபத்தில் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ஆரோக்யமானது அல்ல.

ஒரு படைப்பாளனின் படைப்பை திருடுவதுபோல ஒரு முட்டாள்தனமானது என்னவாக இருக்க முடியும்?. கேப்டன் மில்லர் திரைப்படம், டிஸ்கவரி பதிப்பகம் வெளியிட்டுள்ள தனது 'பட்டத்துயானை' நாவலின் அப்பட்டமான திருட்டு என்று எழுத்தாளர் வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டி உள்ளார். படைப்பாளர்கள் குரல்கொடுக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து நடிகர் வேல ராமமூர்த்தியும் இதுகுறித்து காட்டமாக பேசியுள்ளார். அவர் சமீபத்திய பேட்டியில் பேசியதாவது, 'கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது 'பட்டத்துயானை' நாவலை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக கேள்விப்பட்டேன். இதெல்லாம் செய்ய அசிங்கமா இல்லையா, பட்டத்துயானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் அல்லது அனுமதி வாங்கி இருக்கலாம்.

கேப்டன் மில்லர் மட்டுமல்ல இன்னும் பல படங்களிலும் எனது கதைகள், சீன்கள் திருடப்பட்டுள்ளன. ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் கூட எனது நாவலில் இருந்து சீன்கள் வைக்கபட்டுள்ளதாக வாசகர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். கேப்டன் மில்லர் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

புகார் தந்தாலும்.. வலுத்தவன் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள். தமிழ் திரையுலகில் இப்படி அடிக்கடி நடப்பது அசிங்கமாக உள்ளது. ஒரு படைப்பாளியின் கதையை கூச்சமே இல்லாமல் திருடுகின்றனர். ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்