நடக்கக்கூட முடியல... உதவி பண்ணுங்க - நடிகர் வெங்கல் ராவ் கோரிக்கை
|நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து காமெடியில் கலக்கியவர் நடிகர் வெங்கல் ராவ்.
சென்னை,
ஆந்திர மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட வெங்கல் ராவ், 25 ஆண்டுக்கு மேலாக சண்டை மாஸ்டராக தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்தவர். பிறகு, உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சண்டை மாஸ்டராக வேலை செய்ய முடியாததால் நகைச்சுவை நடிகராக வடிவேலுவுடன் நிறையத் திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக, "தலையில் இருந்து கை எடுத்தால் கடிப்பியா" என்ற நகைச்சுவை காட்சி மூலம் பிரபலமானார்.
இவர் 2022 -ம் ஆண்டு சிறுநீரகக் கோளாறு காரணமாகத் தனது சொந்த ஊரான விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெங்கல் ராவ் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுராஜ் இயக்கத்தில் வெளியான 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு, உடல்நிலை சரியில்லாமல் போகவே தொடர்ந்து சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் வெங்கல் ராவ், தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பொருளாதார ரீதியாக யாரேனும் உதவுங்கள் என்றும் கோரி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் வெங்கல் ராவ். எனக்கு கை, கால் விழுந்திடுச்சு. என்னால் நடக்கக்கூட முடியவில்லை, பேசவும் முடியவில்லை. சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்குச் செல்லக் கூட பணம் இல்லை. மருந்து கூட வாங்க முடியவில்லை.
சினிமா நடிகர்கள், சங்கங்கள் எனக்கு உதவி செய்யுங்கள். உங்களால் முடிந்த உதவி செய்தால் கூட போதும். இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை." என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவருடன் நடித்த நடிகர்கள், திரைத்துறை சங்கங்கள் வெங்கல் ராவிற்கு உதவிட வேண்டும் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.