அரசியலுக்கு வர முடிவா? சுருதிஹாசன் விளக்கம்
|கோவை சென்ற சுருதிஹாசனிடம் அரசியலுக்கு வர முடிவு செய்து இருக்கிறீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு நடிகை சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ள 'சலார்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் விரைவில் திரைக்கு வர உள்ளது. 'தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
தந்தை கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து சுருதிஹாசனும் அரசியலுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் கோவை சென்ற சுருதிஹாசனிடம் அரசியலுக்கு வர முடிவு செய்து இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் கூறும்போது, "எனக்கு இப்போது அரசியலில் ஈடுபட பெரிய அளவில் விருப்பம் எதுவும் இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது'' என்றார்.
மேலும் சுருதிஹாசன் கூறும்போது, "நான் தமிழ் பெண். எனவே தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன். ஹாலிவுட் படமொன்றிலும் நடித்து வருகிறேன். பெரிய பட்ஜெட் படமா என்றெல்லாம் பார்ப்பது இல்லை. மக்களுக்கு நல்ல கதைகளை கொடுப்பதுதான் முக்கியம். பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளேன். அது விரைவில் வெளியாக இருக்கிறது'' என்றார்.