< Back
சினிமா செய்திகள்
பழைய பாதைக்கு திரும்பலாமா?
சினிமா செய்திகள்

பழைய பாதைக்கு திரும்பலாமா?

தினத்தந்தி
|
21 Aug 2022 11:03 AM GMT

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த படங்கள் எதிர்பார்த்த அந்தஸ்தை பெற்று தரவில்லை என்று மீண்டும் பழைய பாதைக்கு திரும்பலாமா... என்று யோசித்து வருகிறாராம்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் சந்தானம். கதாநாயகர்களையே கலாய்த்து தள்ளும் இவரது நகைச்சுவை வெகுவாக ரசிக்கப்பட்டது. இதனால் குறுகிய காலத்திலேயே பல படங்களில் நடித்து பிரபலமானார். நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகராகவும் உயர்ந்தார்.

நகைச்சுவையில் கோலோச்சி கொண்டிருந்த அவருக்கு திடீரென கதாநாயகன் ஆசை உதித்தது. இதைத்தொடர்ந்து 'அறை எண் 305-ல் கடவுள்', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தார். அந்த படங்களும் வெற்றி பெற்றன. இதனால் அவரது நம்பிக்கை அதிகரித்தது.

அதனைத் தொடர்ந்து 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். 'இனிமே இப்படித்தான்', 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'பாரிஸ் ஜெயராஜ்', 'சபாபதி', 'டிக்கிலோனா', 'குலுகுலு' போன்ற படங்களிலும் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்து வந்தார். ஆனால் இந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அந்தஸ்தை பெற்று தரவில்லை.

என்னதான் விமர்சனம் வந்தாலும் கதாநாயகனாக நடிப்பது என்பதில் சந்தானம் உறுதியாக இருந்தார். தற்போது அவரது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவருக்கு பல்வேறு யோசனைகளை கூறி வருகிறார்கள். 'நகைச்சுவை நடிகராக இருந்தபோதுதான் மக்களிடம் அதிகம் செல்வாக்கு இருந்தது. கதாநாயகனாக நடிப்பது தவறில்லை. இருந்தாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடிக்கலாமே...', என்று அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால் மீண்டும் பழைய பாதைக்கு திரும்பலாமா... என்று சந்தானம் யோசித்து வருகிறாராம்.

மேலும் செய்திகள்