ஹெல்மெட் போடாமல் புல்லட் பயணம் - விமர்சனத்தால் பதறிய நடிகை
|வீடியோ எடுப்பதற்காக பத்து நிமிடங்கள் ஹெல்மெட் போடாமல் ஓட்டினேன் என்று பவித்ரா கூறினார்.
சென்னை,
சின்னத்திரையில் ஒளிபரப்பான நகைச்சுவை சமையல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரபலமானவர், பவித்ரா லட்சுமி. நாய் சேகர் என்ற படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் படங்கள் நடிக்கிறார்.
இந்நிலையில், பவித்ரா லட்சுமி ஹெல்மெட் போடாமல் புல்லட்டில் செல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு 'லைக்' போட்டு வரும் அதேவேளையில், பலரும் கண்டித்திருக்கிறார்கள். ஹெல்மெட் போடாமல் எப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டலாம்? நடிகையாக இருந்து கொண்டே இப்படி விதிகளை மீறலாமா? என்று பலரும் கேள்வி எழுப்பியதுடன், அவர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
இதனால் பதறிப்போன பவித்ரா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். அதில், 'புல்லட் ஓட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இதற்காக ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டேன். நான் வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது ஹெல்மெட் அணிந்திருந்தேன். இந்த வீடியோ எடுப்பதற்காக பத்து நிமிடங்கள் ஹெல்மெட் போடாமல் ஓட்டினேன். மற்றபடி விதிகளை மீறவில்லை' என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.