< Back
சினிமா செய்திகள்
வளரும் இளம் நடிகர்கள்
சினிமா செய்திகள்

வளரும் இளம் நடிகர்கள்

தினத்தந்தி
|
28 July 2023 12:30 PM IST

தமிழ் பட வளர்ச்சியில் பெரிய நடிகர்களின் படங்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் வளரும் இளம் நடிகர்களின் படங்களும் முக்கியம்.

இன்றைய காலகட்டத்தில் உச்ச நடிகர்களின் படங்கள் வருடத்துக்கு ஒரு படம் என்ற ரீதியில்தான் வெளியாகிறது. அவர்களின் சம்பளமும் சிறிய தயாரிப்பாளர்கள் நெருங்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த சூழ்நிலையில் பட்ஜெட் தயாரிப்பாளர்களின் ஒரே சாய்ஸ், வளரும் இளம் நடிகர்கள் மட்டுமே. அந்த வகையில் தமிழ் சினிமாவில் வலம் வந்துகொண்டிருக்கும் சில இளம் நடிகர்கள் விவரம் வருமாறு:-

துருவ் விக்ரம்

விக்ரம் மகன் என்பதாலேயே துருவ் விக்ரம் மீது புகழ் வெளிச்சம் தானாக விழ ஆரம்பித்தது. `ஆதித்ய வர்மா', `மகான்' படங்களில் நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கும் படம், `டாடா' கணேஷ் இயக்கும் படம் என பிஸியாக இருக்கிறார்.

அர்ஜுன் தாஸ்

காந்தக் குரலால் அதிகம் அறியப்படுபவர் அர்ஜுன்தாஸ். `கைதி', `விக்ரம்' போன்ற வெற்றி படங்கள் இவருக்கு சினிமாவில் புதிய பாதையை வகுத்து கொடுத்தது. சமீபத்தில் வந்த `அநீதி'யிலும் சிறப்பாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார்.

அஸ்வின்

துணை வேடங்களில் நடித்து நாயகனாக உயர்ந்தவர் அஸ்வின். டி.வி. நிகழ்ச்சி மூலம் மேலும் புகழ் அடைந்தார். `என்ன சொல்ல போகிறாய்' படத்தில் நாயகனாக நடித்தார். பிரபு சாலமன் இயக்கிய `செம்பி'யில் நல்ல பெயர் கிடைத்தது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

ஹரீஷ் கல்யாண்

பல வருட போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் கவனிக்கத்தக்க இடத்துக்கு வந்துள்ளார் ஹரிஷ் கல்யாண். `நூறுகோடிவானவில்', `எல்.ஜி.எம்', `டீசல்', `லப்பர் பந்து' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

தினேஷ்

அறிமுகப் படமான `அட்டகத்தி' ஹிட்டாகியும் சில காரணங்களால் தினேஷ் மார்க்கெட் சூடுபிடிக்காமல் இருந்தது. பா.ரஞ்சித் தயாரித்துள்ள `ஜே பேபி', `தேரும் போரும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அசோக் செல்வன்

சினிமா பின்னணி இல்லாமலேயே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் அசோக் செல்வன். இவருடைய `போர்தொழில்' ஹிட்டானதால் ரசிகர்கள் மற்றும் சினிமா வணிகர்கள் பார்வை இவர் பக்கம் திரும்பியுள்ளது. `சபா நாயகன்', `புளூ ஸ்டார்' படங்கள் கைவசம் உள்ளது.

முகேன்

மலேசிய தமிழரான முகேன், `வேலன்' படத்தில் அறிமுகமானர். `மதில்மேல் காதல்', `காதல் என்பது சாபமா', `ஜின்' படங்கள் இவரிடம் உள்ளது.

வசந்த் ரவி

அறிமுகப் படமான `தரமணி'யில் சிறப்பாக நடித்து கவனம் ஈர்த்தவர். சமீபத்தில் `அஸ்வின்ஸ்' வெளியானது. ரஜினி நடிக்கும் `ஜெயிலர்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். நாயகனாகவும் நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார்.

கவின்

`நட்புன்னா என்னன்னு தெரியுமா' படத்தில் அறிமுகமானவர். `டாடா' வெற்றிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான படங்கள் குவிந்துள்ளது. நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் படம் தவிர சில படங்கள் கைவசம் உள்ளது.

மணிகண்டன்

`ஜெய்பீம்' படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். சமீபத்தில் இவர், நடித்த `குட்நைட்' ஹிட்டானதால் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

பிரதீப் ரங்கநாதன்

`லவ் டுடே' வெற்றிப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான பிரதீப் ரங்கதான் பல டைரக்டர்கள், தயாரிப்பாளர்களின் பார்வையில் விழுந்துள்ளார். நிறைய பட வாய்ப்புகள் குவிகின்றன.

மேலும் செய்திகள்