ஸ்ரீதேவியின் பயோபிக் உருவாக அனுமதிக்க மாட்டேன் - போனி கபூர்
|நான் உயிரோடு இருக்கும் வரை ஶ்ரீதேவியின் பயோபிக் உருவாக அனுமதிக்க மாட்டேன் என்று போனி கபூர் கூறியுள்ளார்.
மும்பை,
நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்க மாட்டேன் என்று நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,
ஸ்ரீதேவி என்னைவிட ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரால்தான் நான் ஆன்மிகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். ஸ்ரீதேவி வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்களை ஏற்கக்கூடியவர். அவரது தாயார் இறந்தபோது அவரது தாயாரின் சிதைக்கு ஸ்ரீதேவிதான் தீமூட்டினார் என்றார்.
மேலும் அவரிடம், 'ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க விரும்புகிறீர்களா?' என கேட்டபோது, "அவர் பெரும்பாலும் தனிப்பட்ட நபராக இருக்க விரும்புவார். அவர் வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்கமாட்டேன்" என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தார். அவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.