பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான இஸ்ரேலில் பாலிவுட் நடிகை சிக்கி தவிப்பு
|பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி உள்ள இஸ்ரேலில் சிக்கிய பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 779 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு, இஸ்ரேலுக்கான முழு ஆதரவை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், பாலிவுட் நடிகை நஸ்ரத் பரூச்சா இஸ்ரேலில் சிக்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி அவருடைய படக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் கூறும்போது, துரதிர்ஷ்டவசத்தில் நஸ்ரத், இஸ்ரேலில் சிக்கி கொண்டார். ஹைபா சர்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இஸ்ரேலுக்கு சென்றார் என கூறியுள்ளார்.
கடைசியாக அவருடன் நேற்று மதியம் 12.30 மணியளவில் படக்குழுவினர் தொடர்பு கொண்டுள்ளனர். அதன்பின்பு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனினும், அவரை இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்பி கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம். எந்தவித பாதிப்பும் இன்றி அவர் இந்தியாவுக்கு திரும்புவார் என படக்குழு உறுப்பினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.