< Back
சினிமா செய்திகள்
ஆடுஜீவிதம் திரைப்படம் யாருக்கும் எதிரான படமல்ல - இயக்குநர்  பிளஸ்ஸி
சினிமா செய்திகள்

'ஆடுஜீவிதம்' திரைப்படம் யாருக்கும் எதிரான படமல்ல - இயக்குநர் பிளஸ்ஸி

தினத்தந்தி
|
29 Aug 2024 8:34 PM IST

‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் தனிப்பட்ட நபரையோ, இனத்தையோ, நாட்டையோ, நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்படவில்லை என்று இயக்குநர் பிளஸ்ஸி கூறியுள்ளார்.

மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டது. நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்த இப்படத்தை பிளஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கியிருந்தார். பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகளவில் கவனம்பெற்ற நாவலை நல்ல சினிமாவாகவே மாற்றியிருந்தனர். இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் தொழில்நுட்ப ரீதியாகவும் பல பாராட்டுகளைப் பெற்றது. குறிப்பாக, ஏ.ஆர். ரகுமானின் இசை படத்தின் ஆன்மாகவே பார்க்கப்பட்டது. கேரள அரசின் மாநில விருதுகள் சிறந்த நடிகர் - பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்), சிறந்த இயக்குநர் பிளஸ்ஸிக்கும் கிடைத்தது.

ஆனால், இப்படம் அரேபியர்களைக் கொடூரமானவர்களாக, இரக்கமற்றவர்களாக சித்தரிப்பதாக சவுதி அரேபியாவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. அதனால், சவுதியில் இப்படத்தைத் தடை செய்துள்ளனர். அதேநேரம், இப்படத்தின் இறுதியில் நஜீப்பைக் காப்பாற்றும் பணக்கார அரேபியராக நடித்த ஜோர்டான் நடிகர் அகேப் நஜன் படத்தின் கதையை (ஸ்கிரிப்ட்) சரியாக வாசிக்காமல் நடித்துவிட்டதாக, சௌதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து இயக்குநர் பிளஸ்ஸி எக்ஸ் தளத்தில் விளக்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆடுஜீவிதம் திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆடுஜீவிதம் நாவலின் சினிமா தழுவல்தான். மனித மனதின் உன்னதமே இப்படத்தில் தீவிரமாக பேசப்பட்டிருக்கிறது. நஜீப் (கதைநாயகன்) வைத்திருந்த கடவுள் நம்பிக்கையால், அக்கடவுள் முதலில் இப்ராஹிம் கத்ரியாகவும் பின் அவனை ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்துச் செல்லும் அரேபியர் வடிவிலும் வருவதையே கூறியிருக்கிறோம்.

நான் படம் முழுவதும் இந்த விசயத்தைக் கடத்தவே முயற்சி செய்திருக்கிறேன். தனிப்பட்ட நபரையோ, இனத்தையோ, நாட்டையோ, நம்பிக்கைகளையோ புண்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்படவில்லை.. அரேபியர்கள் இரக்கமும், அனுதாபமும் கொண்டவர்கள் என்பதைக் காட்டவே நஜீப் சாலையை அடைந்ததும் அவனை தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் அழைத்துச் செல்லும் அரேபியரின் கதாபாத்திரம் வைக்கப்பட்டிருந்தது.ஆடுஜீவிதம், சினிமா என்னும் கலை வடிவில்தான் பேசப்பட வேண்டும். சிலர் இப்படத்திற்கு தவறான விளக்கத்தை அளித்து வருகின்றனர்." எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்