பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ்அப்பில் கடைசி ஸ்டேட்டஸ்..விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்
|அம்ரிதா பாண்டேவின் மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா,
போஜ்புரி, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்ரிதா பாண்டே. படங்கள் மட்டுமல்லாது, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் அம்ரிதா. கடந்த 2022-ல் மும்பையை சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மும்பையில் வசித்து வந்த நிலையில், தனது சகோதரி வீணா பாண்டே திருமணத்திற்காக கணவருடன் வந்திருக்கிறார்.
திருமணம் முடிந்து சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்த அம்ரிதா பாண்டே தனது திரையுலக வாழ்க்கை குறித்து மிகுந்த கவலையிலும், மன அழுத்தத்திலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அம்ரிதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். மாலை 3.30 மணியளவில் அவரது சகோதரி அம்ரிதாவின் அறைக்கதவை நீண்ட நேரம் தட்டிப் பார்த்தும், அவர் திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போது தான் அவர் தற்கொலை செய்து கொண்ட விஷயம் தெரியவந்துள்ளது. அம்ரிதாவின் சகோதரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அம்ரிதாவை கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் அம்ரிதாவின் உடலை அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த விசாரணையில், அவர் தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்பு தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. அதில், "இரண்டு படகுகளில் வாழ்க்கை இருக்கிறது. அப்படி ஏன் சவாரி செய்ய வேண்டும். அதனால் படகை மூழ்கடித்து என்னுடைய பாதையை எளிதாக்கி கொண்டேன்' என்று ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
அம்ரிதா பாண்டே மறைவுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.