ஓட்டல் அறைக்கு அழைத்த ஹீரோ: நடிகை விசித்ரா பகிர்ந்த கசப்பான அனுபவம்
|நடிகை விசித்ரா திரைத்துறையில் தான் சந்தித்த கசப்பான அனுபங்கள் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் 1990 காலக்கட்டத்தில் கவர்ச்சியிலும், நகைச்சுவையிலும் பிரபல நடிகையாக திகழ்ந்தவர், விசித்ரா. தற்போது சினிமாவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். விசித்ரா கூறும்போது, "ஒருமுறை முன்னணி தெலுங்கு நடிகர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். கேரளாவில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது நான் தங்கியிருந்த அறைக்கு வந்த ஹீரோ, 'இரவில் என்னுடைய ரூமுக்கு வா', என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நான் செல்லவில்லை. மறுநாளில் இருந்து எனக்கு நிறைய பிரச்சினைகள் ஆரம்பித்தது. இரவு ஆனாலே குடித்துவிட்டு வந்து என் ரூம் கதவை பலமாக தட்டி சிலர் தொல்லை கொடுப்பார்கள். அப்போது எனது வேண்டுகோளை ஏற்று ஓட்டலின் மானேஜர் யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையில் தங்கவைத்து என்னை பாதுகாத்தார்.
சூட்டிங்கின்போது ஒருவர் எனது உடலில் தவறாக தொட்டதை உணர்ந்தேன். மறுபடி என்னை தொட வந்தபோது, அந்த நபரை பிடித்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் ஒப்படைத்தேன். ஆனால் ஸ்டண்ட் மாஸ்டரோ அவரை கண்டிக்காமல், எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். யாருமே இதை தட்டிக்கேட்கவில்லை.
நடிகர் சங்கத்திடம் புகார் அளித்தேன். போலீசிலும் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கு யாருமே ஆதரவு அளிக்காததால்தான் நான் சினிமாவை விட்டே விலக முடிவு செய்தேன். என் சினிமா பயணத்தில் எனக்கு மரியாதை கிடைக்கவில்லை. ஒருவருக்கு பிரச்சினை என்றால் அனைவருமே ஒதுங்கி போகிறார்கள். இது என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய பூகம்பம். இதனால் எனக்குள் இருந்த நடிகை தொலைந்தே போனாள்''என்றார்.