'தலைமைச் செயலகம்' தொடரில் நடித்து பாராட்டு பெற்ற பிக்பாஸ் பிரபலம்
|‘தலைமைச் செயலகம்’ தொடரில் தனது சிறந்த நடிப்பிற்காக நடிகர் நிரூப் நந்தகுமார் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'தலைமைச் செயலகம்' வெப்சீரிஸில் நடித்திருக்கும் நிரூப்பின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த வெப் தொடரில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் நிரூப் பகிர்ந்து கொண்டதாவது, "அனுபவம் வாய்ந்த இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் ஹரிஹரன் என்ற சிக்கலான கதாபாத்திரத்தில் நடித்தது என் நடிப்புத் திறமையை இன்னும் பட்டைத் தீட்டும்படியாக இருந்தது. வெறும் கதாபாத்திரமாக மட்டுமே இதை அணுகாமல் நடிப்பிற்கு சவால் விடும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியின் நுணுக்கங்களை தேடித்தேடி கற்றுக் கொண்டேன். என் நடிப்பைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். நடிப்பில் இந்த இடத்தை அடைய பல சவால்கள், தூக்கமில்லாத இரவுகள், பல ஆடிஷன்கள், நிராகரிப்புகள், பொருளாதார ரீதியாக பிரச்சினை எனப் பல தடைகளைத் தாண்டிதான் வந்திருக்கிறேன்.
ஸ்ரேயா ரெட்டி மற்றும் கிஷோர் போன்ற திறமையான சக நடிகர்கள் பலருடன் வசந்தபாலனின் இயக்கத்தில் பணிபுரிந்தது சிறந்த அனுபவம். இயக்குநரின் கதை எங்கள் நடிப்பால் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று சிறந்த நடிப்பைக் கொடுத்தோம். ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். எங்கள் எல்லோருக்குமே சிறந்த அனுபவத்தை இந்தப் படம் கொடுத்தது" என்றார்.
நடிகர் மாதவன் மற்றும் இயக்குநர் மித்ரன் ஜவஹர் ஆகியோருடன் நம்பிக்கைக்குரிய படத்தில் இணைந்துள்ளது பற்றி நடிகர் நிரூப் கூறுகையில், "மித்ரன் ஜவஹரின் திறமையான இயக்கத்தில் நடிகர் ஆர். மாதவனுடன் இணைந்து பணியாற்றியது என்னுடைய கலைப்பயணத்தில் அடுத்தக் கட்டம்" என்றார்.