நீண்ட கால காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் பிரபலம் நடிகர் கவின்
|நடிகர் கவின் தனது நீண்ட கால காதலியான மோனிகா டேவிட்டை நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொண்டார்.
சென்னை,
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளிவந்த கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கவின். அதன்பின்னர், சரவணன் மீனாட்சி மற்றும் தாயுமானவன் போன்ற பிரபல தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றார்.
2017-ம் ஆண்டில் சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து, முதன்முறையாக பெரிய திரையிலும் அறிமுகம் ஆனார். அதற்கு அடுத்த ஆண்டில் நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற காமெடி படத்தில் நாயகனாக நடித்து பிரபல நடிகரானார்.
நடப்பு ஆண்டில் கவின் நடிப்பில் வெளிவந்த தாதா படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பாக்ஸ் ஆபீசிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நடிகர் கவின் தனது நீண்ட கால காதலியான மோனிகா டேவிட்டை இன்று திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இதுபற்றிய புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3-ல் ஒருவராக பங்கேற்ற கவின், அப்போது சக போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.
இதன்பின் கவினுடனான காதலை லாஸ்லியாவும் ஒப்பு கொண்டார். எனினும், தங்களுடைய காதல் சரிவரவில்லை என்றும் லாஸ்லியா பின்னர் கூறினார். அனிருத் இசையமைக்கும் பெயரிடப்படாத படமொன்றில் நடிகர் கவின் நடித்து வருகிறார்.