தி.நகரில் பிரமாண்ட கடை... புதிய தொழில் தொடங்கிய நடிகை சினேகாவை பாராட்டும் ரசிகர்கள்
|நடிகை சினேகா கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சென்னை,
கடந்த 2000ம் ஆண்டு வெளியான 'என்னவளே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சினேகா. அதன்பின்னர் கமல், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து தென் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார்.
தமிழ் சினிமாவில் கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு 'புன்னகை அரசி' என ரசிகர்கள் சினேகாவை கொண்டாடினர். இவர் கடந்த 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆத்யந்தா, விஹான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் விலகி இருந்த சினேகா அவ்வப்போது சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.
இவர் தற்போது பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (GOAT) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சினேகா நடித்து வருகிறார்.
இந்நிலையில் புதிய தொழில் ஒன்றை நடிகை சினேகா தொடங்கியுள்ளார். சென்னை தி.நகரில் 'சினேகாலயா சில்க்ஸ்' என்ற பட்டு புடவை கடையை வரும் 12ம் தேதி தொடங்க உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர்,'எனது அன்பான ரசிகர்களுக்கு, என் வாழ்க்கை பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கி உள்ளீர்கள். இத்தனை வருடங்களாக நீங்கள் என் மீது பொழிந்த அன்புக்காக, உங்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
அனைவருக்கும் கனவுகள் நனவாவது என்பது வாழ்க்கையில் பெரிய விஷயம். நான் இப்போது ஒரு அற்புதமான மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறேன். நான் சொந்தமாக 'சினேகாலயா சில்க்ஸ்' என்ற பட்டுப் புடவை கடையை தொடங்க உள்ளேன். எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.