2023-ல் திரைக்கு வரும் பெரிய படங்கள்
|கோடம்பாக்கத்துக்கு 2023 கொண்டாட்டமான ஆண்டாக அமையப் போகிறது. முன்னணி கதாநாயகர்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. அதோடு, அவர்கள் நடிக்கப்போகும் புதிய படங்களின் படப்பிடிப்புகளும் தொடங்க உள்ளன. விஜய்யின் `வாரிசு', அஜித்குமாரின் `துணிவு' படங்கள் பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளன.
`வாரிசு' படம் வழக்கம் போல் பேமிலி, ஆக்ஷன், காதல் கலந்த கமர்ஷியல் சினிமாவாக வெளிவர உள்ளது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். `வாரிசு' படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். தொடர்ந்து அட்லீ இயக்கும் படத்திலும் நடிக்க சம்மதித்து உள்ளாராம்.
அஜித் நடித்திருக்கும் `துணிவு' படமும் `பாக்ஸ் ஆபீஸ்' வெற்றிக்காக காத்திருக்கிறது. `நேர்கொண்ட பார்வை', `வலிமை' படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத், அஜித்துடன் இணைந்து `ஹாட்ரிக்' அடிப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
ரஜினி, கமல் படங்கள் எப்போது திரைக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாடு விழாக்கோலம் காணும். 2023-ம் ஆண்டில் குறைந்தது மூன்று படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ரஜினிகாந்த்.
நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் `ஜெயிலர்' படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. இந்தப் படம் ரஜினியின் வழக்கமான கமர்ஷியல் பார்முலாவில் உருவாகியுள்ளது. மகள் ஐஸ்வர்யா இயக்கும் `லால் சலாம்' படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இன்னொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை `லவ் டுடே' இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அல்லது தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் நடிக்கும் `இந்தியன்-2' படத்தை அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். 2023-ம் ஆண்டு பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் தேவர் மகன் இரண்டாவது பாகமாக வெளியாக உள்ளது. தொடர்ந்து பா.ரஞ்சித் படத்திலும், மணிரத்னம் படத்திலும் நடிக்க உள்ளார்.
விக்ரமுக்கும் புதிய ஆண்டு பெரிய அளவில் கை கொடுக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ள `தங்கலான்' படம் வெளி வர உள்ளது. கோலார் தங்கவயல் உருவாக்கத்தில் தமிழர்கள் எத்தகைய பங்கு வகித்தார்கள் என்பதை படத்தில் சொல்கிறார்கள்.
சூர்யாவுக்கு புதிய ஆண்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் படம் ஜனரஞ்சகமான ஒரு படமாக வெளியாக உள்ளது. தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் `வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார்.
தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்', சிம்பு நடிக்கும் `பத்து தல' படங்கள் 2023- ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு மறக்க முடியாத படங்களாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.
சிவகார்த்திகேயனுக்கு `மாவீரன்', கமல் தயாரிப்பில் ரங்கூன் ராஜ்குமார் இயக்கியுள்ள படங்கள் வெளியாக உள்ளது. இந்தப் பட்டியலில் `பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்', ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படங்களும் புதிய வருடத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக வர உள்ளது.