< Back
சினிமா செய்திகள்
திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்
சினிமா செய்திகள்

திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்

தினத்தந்தி
|
29 Sept 2023 11:09 AM IST

சில வருடங்களுக்கு முன்பு வரை பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் தவறாமல் வரும். இப்போது பெரிய நடிகர்கள் படம் எப்போது வெளியாகிறதோ, அப்போதுதான் பண்டிகை என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு தங்கள் அபிமான நடிகர்களின் படம் வெளிவரும்போது கொண்டாட தயாராகிவிடுகிறார்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து `துணிவு', `வாரிசு', `பொன்னியின் செல்வன் -2', மாவீரன், `ஜெயிலர்', என பெரிய நடிகர்களின் படங்கள் வந்தன. அந்த வகையில் அடுத்து திரைக்கு வரவுள்ள சில பெரிய பட்ஜெட் படங்கள் பற்றிய விவரம்:-

லியோ

விஜய் நடித்துள்ள `லியோ' படம், அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. திரிஷா நாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் ரிலீசாக உள்ளது. காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ள `லியோ'வில் விஜய் கதாபாத்திரம் பதுங்கி பாயும் புலியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம்.

அயலான்

`மாவீரன்' வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர உள்ள படம் `அயலான்'. அறிவியல் சார்ந்த கதையான இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் பொங்கலுக்கு தள்ளிப்போகிறது. ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

துருவ நட்சத்திரம்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள `துருவ நட்சத்திரம்' படம் நவம்பர் இறுதியில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் அடிதடி கலந்த திரில்லர் கதையம்சத்தில் உருவாகி உள்ளது. இதில் விக்ரம் தோற்றம் புதுப்பொலிவோடு இருப்பதால் படத்தின் முன்னோட்டத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ரிது வர்மா, சிம்ரன், ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜப்பான்

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள `ஜப்பான்' படம், தமிழ், தெலுங்கு உட்பட நான்கு மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. கொள்ளை கும்பல் தலைவன் ஒருவனின் வாழ்க்கையை மையமாக வைத்து இதன் கதை எழுதப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். திருடன் - போலீஸ் கதையாக இருந்தாலும் அதை தன்னுடைய பாணியில் நக்கல், நையாண்டியுடன் சொல்லியுள்ளாராம் இயக்குனர்.

இந்தியன் 2

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள `இந்தியன் 2' படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட வேலைகளில் பிஸியாக உள்ளது படக்குழு. படத்தின் சில காட்சிகளை பார்வையிட்ட கமல், ஷங்கரை பாராட்டி உள்ளார். இதனால் இந்தியன் 2' மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தங்கலான்

`அட்டக்கத்தி', `மெட்ராஸ்', `சார்ப்பட்டா பரம்பரை' என தனித்துவமான படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனிப் பாதையை அமைத்துக்கொண்ட பா.ரஞ்சித், தற்போது விக்ரம் நடிக்கும் `தங்கலான்' படத்தை இயக்கியுள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் படம் உருவாகி உள்ளது. இதில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் படம் திரைக்கு வருகிறது.

கேப்டன் மில்லர்

ஆக்ஷன் டிராமாவாக வெளிவரவுள்ளது தனுஷ் நடித்துள்ள `கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் நடித்துள்ளனர். `அசுரன்', `கர்ணன்' போல பழிக்கு பழிவாங்கும் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ். இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகவுள்ளது.

மக்களின் கவலைகளை மறக்கடிக்கச் செய்வதோடு, சிந்தனைகளையும் தூண்டும் ஆகச் சிறந்த படைப்புகள் எப்போதும் போல் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி, அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறும் என்ற நம்பிக்கையில் திரையுலகம் உள்ளது.

மேலும் செய்திகள்